Published : 15 Nov 2022 12:07 PM
Last Updated : 15 Nov 2022 12:07 PM
சென்னை: கால்பந்து வீராங்கனை, மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று (நவ.15) காலை உயிரிழந்த கால்பந்து வீராங்கனை (17வயது) பிரியாவின் மரணத்திற்கு என்ன காரணம் என மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்னர்.
அவர்கள் அளித்த விளக்கத்தில், " சென்னை கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவி பிரியாவுக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்கள் சேதமடைந்ததால் உயர் சிகிச்சைக்காக கடந்த 10 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி சேர்க்கப்பட்டார்.
அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மாணவி பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் காயம் எவ்வாறு உள்ளது என்பதை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் காயம் மேலும் அதிகரித்திருப்பதும், தசை வளர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டது. அதனால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு உறுப்புகளும் பாதிக்கப்பட்டது. கல்லீரல் செயலிழந்தது, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து, டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு சென்றார். அதனால் இரவு முழுவதும் டயாலிசிஸ் செய்யப்பட்டது.
தசை கிழிந்ததால் தசையில் இருந்து வெளிவரக்கூடிய திரவ வடிவிலான மையோகுளோனஸ் என்ற திரவம் வெளியேற துவங்கியது. அந்த திரவம் பொதுவாக சிறுநீர் வழியாக தான் வெளியேறும். ஆனால் திரவம் வெளியேற முடியாமல் ரத்தத்தில் கலந்ததால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, சிறுநீரக பாதிப்பு முதலில் ஏற்பட்டு, சிறுநீரகம் செயலிழந்தது. அதனைத் தொடர்ந்து ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்த நிலையில் மாணவி பிரியா இன்று (நவ.15) காலை 7.15 மணியளவில் மரணம் அடைந்தார். " இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...