Published : 15 Nov 2022 11:02 AM
Last Updated : 15 Nov 2022 11:02 AM
சென்னை: சென்னை கொளத்தூர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக கால் அகற்றப்பட்டு, ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கால்பந்தாட்ட வீரங்கனை பிரியா இன்று காலை (நவ.15) உயிரிழந்தார். மாணவியின் மறைவைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கால்பந்தாட்ட வீராங்கனை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா (17). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார். கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
தவறான சிகிச்சை: இந்நிலையில், மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது கால் அகற்றப்பட்டது.
பெற்றோர் புகார்: இதற்கிடையே, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே பிரியாவின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
சுகாதார துறை விசாரணை: இதுதொடர்பாக விசாரணை நடத்த, அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது. அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், பாதிப்புகளுக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி, அரசிடம் தங்களது அறிக்கையை சமர்ப்பித்தனர். இதற்காக அந்த மருத்துவமனையின் எலும்பியல் துறையைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவி மரணம்: இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில், தொடர்ந்து சிகிச்சையில் இருந்த மாணவியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இன்று காலை 7.15 மணிக்கு, சிகிச்சைப் பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார். மாணவியின் மரணத்தை தொடர்ந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...