

ஈரோடு: அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் ஈரோடு காளைமாடு சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, கோவை மண்டல எல்ஐசி முகவர்கள் சங்கத் தலைவர் குமணன் கூறியதாவது:
காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஐஆர்டிஏ), ஆன்லைன் மூலம் காப்பீடு பெறலாம் என்ற புதிய கொள்கையை வகுத்துள்ளது. மேலும், ஒரு எல்ஐசி முகவரிடம் பாலிசி பெற்று, வேறு முகவரிடம் சேவை பெறலாம் என்பன உள்ளிட்ட கொள்கைகளுடன், ‘பீமா சுகம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை ஆணையம் வகுத்துள்ளது.
இதனால், வாடிக்கையாளர்களுக்கு சேவைக் குறைபாடு ஏற்படும். எல்ஐசி முகவர் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்காக பணி புரிந்தால், எல்ஐசியின் வர்த்தகம் குறையும். எல்ஐசி நிறுவனம் நலிவுற்றால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர். எனவே, ‘பீமா சுகம்’ என பெயரிடப்பட்ட புதிய திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது, என்றார்.