Published : 14 Nov 2022 06:59 PM
Last Updated : 14 Nov 2022 06:59 PM
கோவை: 30 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பன் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் அண்ணா பிறந்தநாளையொட்டி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் கொங்குருபாளையம் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரம் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதன் இறுதியில் மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் வசித்து வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், வீரப்பனின் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக மாதையன் கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக கடந்த மே மாதம் மாதையன் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஆண்டியப்பன் (53), பெருமாள் (59) ஆகியோர் மட்டும் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர். இந்தச் சூழலில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோரை தண்டனைக் காலத்தை கணக்கில் கொண்டும், நன்னடத்தையின் காரணமாகவும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன.
அண்ணா பிறந்தநாளையொட்டி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறும்போது, ''அண்ணா பிறந்தநாளையொட்டி, கோவை மத்திய சிறையில் நீண்ட ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் கடந்த சனிக்கிழமை (12-ம் தேதி ) விடுதலை செய்யப்பட்டனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT