Published : 14 Nov 2022 04:20 PM
Last Updated : 14 Nov 2022 04:20 PM
புதுச்சேரி: “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யாவிட்டால் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்படும்” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேரு பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்பி வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நேரு படத்திற்கு மாலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கூறியது: "ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசால் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது, இவர்கள் தமிழக ஆளுநருக்கு தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால் பின் அந்தக் கோப்பு குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு அதனை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
மீண்டும் கொடுத்த மனுவை ஆளுநர் காலதாமதப்படுத்தினர் என உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தி வழக்கில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்தனர். இதனை மேற்கோள் காட்டி 6 பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரியதால் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது காங்கிரஸாருக்கு அதிர்ச்சியும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள், ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்.
ஆளுநர் உரிய நேரத்தில் முடிவெடுக்காததும், மத்திய அரசின் அலட்சியமுமே விடுதலை செய்ய ஏதுவாக இருந்துள்ளது. தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி தற்போது விடுதலை செய்வது ஏற்றுக் கொள்வதாக இல்லை. இது ஜனநாயகத்திற்க்கு ஏற்ப்புடையதல்ல. தீவிரவாதிகள் யாரை வேண்டுமென்றாலும் கொலை செய்யலாம்; சிறையிலிருந்து வெளியே வரலாம் என்ற மனப்போக்கை ஏற்படுத்துகிறது,
ஒரு சில அரசியல் கட்சிகள் இதைக் கொண்டாடுகின்றனர். ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை குறித்து உடனடியாக மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து அவர்களின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், காங்கிரஸ் தொண்டர்கள் நீதிமன்றம் செல்வோம். காங்கிரஸ் கட்சி சார்பில் மறுசீராய்வு மனுவை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்வோம். இந்நிலைக்கு பிரதமர் எங்களை தள்ள வேண்டாம்" என்று நாராயணசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT