Published : 14 Nov 2022 02:37 PM
Last Updated : 14 Nov 2022 02:37 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓரிரு மாதங்களில் மீண்டும் விலையில்லா சைக்கிள் தரவுள்ளோம். 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில் மாணவர்கள் நாள் விழா காமராஜர் மணி மண்டபத்தில் இன்று நடந்தது. இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு போட்டிகள், அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது: "மத்திய அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை செயல்படுத்துகிறது. புதிய கல்வி கொள்கையை கொண்டுவந்துள்ளனர். புதுச்சேரி அரசும் மாணவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
புதுச்சேரியில் பள்ளிகள் இல்லாத பகுதிகளே இல்லை. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்தியுள்ளோம். ஸ்மார்ட் வகுப்புகளையும் கொண்டு வந்துள்ளோம். உயர் கல்வியில் புதுச்சேரியில் கிடைக்காத கல்வியே இல்லை. ஏழை வீட்டு குழந்தைகள் கூட மருத்துவர்களாக உருவாகியுள்ளனர். அவர்கள் வீட்டு திருமணத்துக்கு செல்லும் போதுதான் கொண்டுவந்த திட்டத்தின் பலனை நேரில் காண முடிகிறது. நினைத்த கல்விக்கு வாய்ப்பு கிடைக்காதபோது மாணவர்கள் சோர்வடையக்கூடாது.
கிடைத்த கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தி படித்து முன்னேற வேண்டும். வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு பணிக்காக மட்டும் கல்வி இல்லை. அறிவை வளர்த்துக் கொள்ளவும் கல்வி தேவை. நிர்வாக பதவிகளில் தற்போது உள்ள பலர் கலை கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள்தான். கலை கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் நிர்வாக பதவிக்கு தங்களை தயார்படுத்த வேண்டும். ஒரே சிந்தனையோடு மாணவர்கள் படிக்க வேண்டும். தங்களின் பள்ளிக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் அரசு செயல்படுத்தும். பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஓரிரு மாதங்களில் இலவச சைக்கிள் வழங்க உள்ளோம். 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்." என்று முதல்வர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் சிவகாமி வரவேற்றார். செல்வ கணபதி எம்பி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT