Published : 08 Nov 2016 12:52 PM
Last Updated : 08 Nov 2016 12:52 PM

திருப்பரங்குன்றத்தில் அதிமுக புது வியூகம்: பூத் நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம், செயின் ஊக்கப் பரிசு?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஒவ்வொரு ‘பூத்’திலும் திமுகவை விட அதிக வாக்குகள் பெற்று கொடுக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு 2 பவுன் தங்க மோதிரமும், தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுக் கொடுக்கும் நிர்வாகிக்கு 5 பவுனில் தங்க செயின் ஊக்கப் பரிசு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.போசும், திமுகவில் டாக்டர் சரவணனும் போட்டியிடுகின்றனர்.

மற்ற கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தினாலும் இந்த இரு கட்சி வேட்பாளர்களுக்கு இடையேதான், வெற்றிக்கானப் போட்டி இருக்கிறது.

அதிமுகவில் தேர்தல் பொறுப்பாளராக நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதால், வெற்றியைத்தாண்டி அரவக்குறிச்சி, தஞ்சாவூரை தொகுதிகளை காட்டிலும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவுக்கு பிரமாண்ட வெற்றிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால், அவரது உத்தரவின்பேரில் 12 அமைச்சர்கள், தென் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், வட்ட மற்றும் கிளைச்செயலாளர்கள் தலைமையில் ஒட்டுமொத்த தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் குவிந்துள்ளதால் திருப்பரங்குன்றம் தொகுதியே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

‘பூத்’ வாரியாக தேர்தல் பிரச்சாரம் செய்ய 20 பேர் அடங்கிய தேர்தல் குழு அமைத்துள்ளனர். இந்த குழுவினர் ஒவ்வொரு பூத்திலும் கட்சிக்கள் வாரியாக வாக்காளர்களை தரம் பிரித்து, பொதுவாக்காளர்களை முழுவதுமாக அதிமுகவுக்கு ஆதரவாக மாற்றுவதற்குவதற்காக, தேர்தல் வியூகம் அமைத்துள்ளனர்.

ஒவ்வொரு ‛பூத்’ நிர்வாகிகளும், தங்கள் பூத்தில் திமுகவை விட கூடுதல் வாக்குகள் பெற்றுக் கொடுத்து கட்சி மேலிடத்திலும், ஒ.பன்னீர் செல்வத்திடம் தனிப்பட்ட முறையில் செல்வாக்கை அதிகரிக்கவும், பதவிகளை தக்கவைத்துக் கொள்ளுவதிலும் முனைப்பாக உள்ளனர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில் திருப்பரங்குன்றத்தில் கடந்த தேர்தலில் 22,992 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிப்பெற்றது. தற்போது தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் மொத்த தேர்தல் உழைப்பும் திருப்பரங்குன்றத்தில் இருக்கிறது. அதனால், அதிமுகவுக்கு வெற்றி என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று.

‘பூத்’ வாரியாக கூடுதல் வாக்குகள் வித்தியாசம் திமுகவை விட மிக அதிகமாக இருக்க வேண்டும் என்பதான் கட்சி நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளை உற்சாகப்படுத்த ‘பூத்’ வாரியாக கூடுதல் வாக்குகள் பெற்றுக் கொடுக்கும் நிர்வாகிளுக்கு 2 பவுன் மோதிரமும், ஒட்டுமொத்தமாக திருப்பரங்குன்றம் தொகுதியிலே அதிகப்பட்ச வாக்குகள் பெற்றுக் கொடுக்கும் நிர்வாகிக்கு 5 பவுனில் தங்கச் செயின் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர் ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x