Last Updated : 03 Nov, 2016 02:27 PM

 

Published : 03 Nov 2016 02:27 PM
Last Updated : 03 Nov 2016 02:27 PM

எப்படி இருந்த பள்ளி, இப்படி ஆயிருச்சே: தஞ்சை வாண்டையார் இருப்பு பள்ளி குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்யக்கோரிய வழக்கின் விசாரணையின் போது, தான் பயின்ற பள்ளியின் தற்போதைய நிலை குறித்து நீதிபதி கவலை தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தக்கோரிய வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.நாகமுத்து கூறும்போது, அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லாததை நானே நேரில் பார்த்துள்ளேன். தஞ்சாவூர் வாண்டையார் இருப்பில் நான் பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர் என்ற முறையில் அண்மையில் சென்றிருந்த போது, பள்ளி வளாகம் முழுவதும் சுத்தமின்றி, எங்கு பார்த்தாலும் தூசியுடனும், துர்நாற்றத்துடனும் காணப்பட்டது. நாங்கள் பயின்ற காலத்தில் எப்படியிருந்த பள்ளி, இப்படி ஆயிருச்சே என நினைத்து வேதனைப்பட்டேன்.

அரசு பள்ளிகளில் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது வேதனையாக உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 39 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பள்ளிகள் தலைமை இல்லாமல் இயங்குகின்றன. நாம் கற்காலத்திலா இருக்கிறோம். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகின்றன. ஆனால், இன்னும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை. மாணவிகளுக்கு தரமற்ற நாப்கின் வழங்கப்படுவதாக பள்ளிகளை ஆய்வு செய்த பெண் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளில் ஏழை குடும்பங்களை சேர்ந்த கிராமப்புற மாணவிகள் தான் பயில்கின்றனர். தரமற்ற நாப்கின் பயன்படுத்தினால், அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும்.

கழிப்பறைகளை பராமரிக்க துப்புரவு பணியாளர்கள் இல்லை. பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் ரூ.1300 சம்பளம் வழங்கப்படுகிறது. கொத்தனாருக்கு தினமும் ரூ.600 சம்பளம் தருகின்றனர். துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் ரூ.1300 மட்டும் வழங்கினால் போதுமா? குறைந்தபட்ச கூலிச் சட்டத்தை பின்பற்றாமல் இருப்பது ஏன்?

பள்ளியை சுத்தம் செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் பஞ்சாயத்து தலைவர்களிடம் கெஞ்சுகின்றனர். நூறு நாள் வேலை தொழிலாளர்களை வைத்து, எப்போதாவது ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறது. கழிப்பறை கட்டியதோடு பொதுப்பணித் துறையினர் ஒதுங்கிவிடுகின்றனர். பள்ளிகளில் குடிநீர் வசதி செய்து தருவதில்லை. சுற்றுச்சுவர் இருப்பதில்லை. இதனால் மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவசமாக வழங்கும் லேப்டாப்கள் திருடப்படுகின்றன. அதற்கான பணத்தை தலைமை ஆசிரியரின் சம்பளத்தில் இருந்து பிடிக்கின்றனர். எத்தனை தலைமை ஆசிரியர்கள் திருட்டுக்கு பயந்து லேப்டாப்களை தங்கள் வீடுகளில் வைத்திருக்கின்றனர் தெரியுமா?

அரசு பள்ளிகளை வர்த்தக பட்டியலில் சேர்த்து மின் கட்டணம் வசூலிக்கின்றனர். சில பள்ளிகளில் மின்சார வசதி இல்லை. மதுரையில் சில பள்ளிகளில் டார்ச் லைட் உதவியுடன் வழக்கறிஞர்கள் குழு ஆய்வு நடத்தியுள்ளது. பள்ளிகளுக்கு வீடுகளுக்கான மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசு பள்ளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அரசு பள்ளியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை புகைப்பட ஆதாரங்களுடன் வழக்கறிஞர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், அனைத்தையும் பூர்த்தி செய்துவிட்டதாக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது என கவலையுடன் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x