Published : 01 Nov 2016 12:15 PM
Last Updated : 01 Nov 2016 12:15 PM
கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே, சித்தூர் வெங்கக்கடவு பகுதியில் ரூ.900 கோடி மதிப்பில் 450 மீட்டர் நீளம், 51.5 மீட்டர் உயரத்தில் அணை கட்டி, ஆண்டுக்கு 4.5 டி.எம்.சி. நீரை கேரளப் பகுதிக்குள் திருப்பிவிட திட்டமிட்டுள்ளது.
இங்கு அணைகட்டுவது தொடர்பாக ஆய்வுசெய்ய, மத்திய அரசின் நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்ட மதிப்பீட்டு வல்லுநர் குழு அனுமதியும் அளித்திருந்தது.
‘தி இந்து’வில் செய்தி
இதையொட்டி, தமிழகத்தின் கொங்குமண்டலப் பகுதிகளில் பதற்றம் சூழ்ந்தது. கொந்தளித்த மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். சித்தூர் சிறுவாணி அணை தொடர்பாக தொடர்ந்து ‘தி இந்து’வில் செய்திகள் வெளியாகின.
எனினும், அணை கட்டும் பணிகளை கேரள அதிகாரிகள் தொடங்கிவிட்டனர். இதற்காக, அணை கட்டப்படவுள்ள சித்தூர் பகுதியில், நூற்றுக்கணக்கான லாரிகளில் கருங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்தன. ‘அணைகட்டும் பகுதியில் என்னதான் நடக்கிறது?’ என்று ‘தி இந்து’வில் நேரடி ரிப்போர்ட் பதிவு செய்யப்பட்டது.
அதில், சித்தூர் வெங்கக்கடவு அணை கட்டும் பகுதிக்கு சில கிலோமீட்டர் தொலைவிலேயே, சித்தூர்-கூலிக்கடவு சாலையின் இருபுறமும் சாலை அமைப்பதற்காக சரளைக்கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், அணை கட்டும் பகுதியில் பெரிய அளவில் கருங்கற்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்த கற்கள் சித்தூர்-கூலிக்கடவு இடையே 14 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிக்காக கொட்டப்பட்டுள்ளதாகவும், அணை கட்டும் பணிக்காக கொண்டுவரப்பட்டவை அல்ல என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதேசமயம், அணை கட்டும் பணி தொடங்கினால், பெரிய பெரிய டிரக்குகள், கன்டெய்னர் லாரிகள், பொக்லைன், புல்டோசர் இயந்திரங்கள் இந்த சாலை வழியாகவே வந்து, செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த சாலை பெரிய அளவில், தரமான முறையில் அமைக்கப்படுவதாக, தமிழக எல்லைப்பகுதியான ஆனைகட்டியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
“கேரளத்தில் ஓடும் ஆற்றிலோ, பள்ளத்திலோ ஒரு பிடி மணலைக் கூட அள்ள முடியாது. அங்கே உள்ள ஒரு மரத்தை வெட்டிக் கொண்டுவர முடியாது. அந்த அளவுக்கு அங்கு சட்டங்கள் உள்ளதுடன், அவை முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிலிருந்துதான் மரங்கள், கற்கள், மணல் எல்லாம் கேரள மாநிலத்துக்குச் செல்கின்றன.
சித்தூர் வெங்கக்கடவுக்கு சில வாரங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 100 முதல் 150 லோடு வரை கருங்கற்கள், சரளைக்கற்கள் சென்றுள்ளன. இதற்காக, தமிழகத்தில் உள்ள சோதனைச் சாவடிகளுக்கு, லோடுக்கு இவ்வளவு என லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளளது. அதனால், அதிகாரிகள் யாரும் அவற்றைத் தடுப்பதில்லை.
இந்த வழியே செல்லும் கருங்கற்கள் உள்ளிட்ட அணை கட்டப் பயன்படும் பொருட்களைத் தடுத்தாலே, அங்கு அணை கட்டுவதை தடுக்கலாம்” என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, தமிழக பகுதியிலிருந்து கேரளத்துக்கு மணல், செங்கல், ஹாலோபிளாக் கற்கள் உள்ளிட்டவை கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டது.
மேலும், முள்ளி, மாங்கரை, ஆனைகட்டி சோதனைச் சாவடிகள் வழியே சென்ற, கல், மண், மணல் லாரிகள் அனைத்தும் தமிழகப் பகுதிக்கே திருப்பி அனுப்பப்பட்டன.
இந்நிலையில், தடையை மீறி கேரள பகுதிக்குள் கட்டுமானப் பொருட்கள் மீண்டும் கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
2 மடங்கு விலை
இதுகுறித்து ஆனைகட்டி பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் கூறும்போது, “கேரள மாநிலத்துக்கு தமிழகப் பகுதியிலிருந்து டிராக்டர்கள், டெம்போக்கள், லாரிகள் மூலம் கட்டுமானப் பொருட்கள் கொண்டுசெல்வது, கடந்த 2 மாதங்களாக தடைபட்டிருந்தது. சோதனைச் சாவடிகளில் உள்ள போலீஸார், கட்டுமானப் பொருட்கள் கொண்டுசென்ற ஒரு வாகனத்தையும், கேரளப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், தற்போது, முள்ளி வழியாகவும், ஆனைகட்டி வழியாகவும் டெம்போக்களில் ஹாலோபிளாக் கற்கள், மணல், சரளைக்கற்களை கொண்டுசெல்லத் தொடங்கியுள்ளனர்.
வழக்கம்போல, டிராக்டர் மற்றும் டெம்போவுக்கு ரூ.300, லாரிக்கு ரூ.500 கமிஷன் வாங்கிக்கொண்டே சோதனைச் சாவடியில் அனுமதிப்பது அடிக்கடி நடக்கிறது. இங்கிருந்து செல்லும் மணல் மற்றும் கற்கள், கேரளப் பகுதியில் இரு மடங்கு விலைக்கு விற்கப்படுகின்றன.
ஆனைகட்டியில் உள்ள அரசு மதுக் கடையால், கேரள அட்டப்பாடி பகுதி மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. அங்குள்ள ஆதிவாசி மக்கள் மது அருந்தி, வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். எனவே, மதுக் கடையை தமிழக அரசு மூட வேண்டும் என்று வலியுறுத்தி, 2 மாதங்களுக்குமேல் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, இரு மாநில அரசு அதிகாரிகளும் கலந்துபேசி, கேரள மக்களின் நலனை உத்தேசித்து, மதுக் கடையை மூடினார்கள்.
இந்த மதுக் கடையை மூடினால், திருட்டுத் தனமாக மது வாங்கிவந்து, இரட்டிப்பு விலைக்கு விற்பனை செய்வது அதிகரிக்கும் என்று ஆனைகட்டி மக்கள் கூறியதை, தமிழக அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை.
தற்போது அந்த மதுக் கடை அகற்றப்பட்டதால், அப்பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பது அதிகரித்துள்ளது. லாரி, டெம்போ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர், 10 பாட்டில்கள் முதல் 20 பாட்டில்கள் வரை வாங்கி வந்து, வீட்டிலேயே வைத்து இரட்டிப்பு விலைக்கு விற்கின்றனர்.
மேலும், கேரளாவில் இருந்து மாங்கரைக்கு மது குடிக்க மோட்டார் சைக்கிள், ஜீப்பிலும் செல்வோர் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால், பல்வேறு விபத்துகளும் நேரிடுகின்றன. கடந்த மாதம் அட்டப்பாடியைச் சேர்ந்த 6 பேர் வந்த ஜீப், ஒரு வீட்டின் வாயிலில் நின்றுகொண்டிருந்தவர் மீது மோதியதில், அவர் உயிரிழந்தார். இவ்வாறு கடந்த 6 மாதங்களில் நேரிட்ட விபத்துகளில் 3 பேர் இறந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் நேரிட்டுள்ளன. குடி போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும், கேரள பகுதியில் நடக்கும் கட்டுமானப் பணிக்கு தமிழகத்திலிருந்து பொருட்களை அனுப்புவது, அங்கு அணைகட்ட இங்கு எதிர்ப்புத் காட்டுவது போன்ற விஷயங்களிலும் அதிகாரிகள் நேர் எதிராகவே செயல்படுகின்றனர்” என்றார்.
இது தொடர்பாக விசாரிக்க அட்டப்பாடி கோட்டத்துறை, அகழி, கூலிக்கடவு, தாவளம், சாவடியூர் பகுதிகளுக்குச் சென்றபோது, பல்வேறு இடங்களில் தமிழகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஹாலோபிளாக் கற்கள், மணல் போன்றவை சாலையோரங்களிலேயே வைத்து, விற்பனை செய்யப்படுவதைக் காணமுடிந்தது.
( அட்டப்பாடி தாவளம் பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள ஹாலோபிளாக் கற்கள். (அடுத்த படம்) சித்தூர் சிறுவாணியில் சாலை அமைப்பதற்காக குவிக்கப்பட்டுள்ள கற்கள்.)
வீடு கட்டுவதற்காகத்தான்
இதுகுறித்து தாவளம் பகுதி மக்கள் கூறும்போது, “சித்தூர் சிறுவாணி அணை பிரச்சினை கிளம்பியதும், தமிழ்நாட்டிலிருந்து எங்களுக்கு வரக்கூடிய கட்டுமானப் பொருட்கள் எல்லாம் நின்றுபோனது உண்மைதான். கோவை காரமடையில் தயாராகும் ஹாலோபிளாக் கற்கள்தான் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் வீடுகட்ட பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், அவை கேரளாவில் தயாராகும் ஹாலோபிளாக் கற்களைவிட தரமாகவும், கனமாகவும் இருக்கும். விலை மட்டும் இங்குள்ளதை விட ரூ.3 கூடுதலாக இருக்கும். அதைத் தவிர மன்னார்காடு, முக்காலி பகுதிகளில் இருந்து வரும் வெட்டுக்கற்களை (பாறையில் வெட்டி எடுக்கப்படும் கற்கள்), இங்கு வீடுகள் கட்டப் பயன்படுத்துவார்கள். அந்தக் கல் ரூ.35-க்கு கிடைக்கும். எனினும், போதுமான அளவு கிடைக்காது. எனவே, ஹாலோபிளாக் கற்களையே இங்குள்ள மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
தவிர, அட்டப்பாடி புதூர், சோலையூர், அகழி ஊராட்சிகளில், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் அதிகம் உள்ளனர். அவர்கள், இந்த கற்களைத்தான் அதிகம் பயன்படுத்துவது வழக்கம்.
கடந்த 2 மாதங்களாக அதிக கெடுபிடி நிலவியதால், கட்டுமானப் பணிகள் தடைபட்டிருந்தன. அந்த தடை நீங்கி, தற்போது காரமடை கற்கள் வரத்தொடங்கியுள்ளதால், நிலுவையில் இருந்த கட்டுமானப் பணிகள் மீண்டும் நடைபெறத் தொடங்கியுள்ளன.
சித்தூரில் சிறுவாணி அணை கட்டும் பணிகள் தொடங் கவேயில்லை. அதற்காக, அங்கே சாலை அமைக்கப்படுவதாகக் கூறுவது தவறு. அங்கேயுள்ள சாலை குண்டும், குழியுமாகிப் போனதால், புதிதாக சாலை அமைக்க நீண்டகாலமாகவே திட்டம் தீட்டியிருந்தனர். அந்தப் பணியே இப்போது நடக்கிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT