Published : 13 Nov 2022 04:40 AM
Last Updated : 13 Nov 2022 04:40 AM

நீலகிரியில் கன மழைக்கு 8 வீடுகள் சேதம்; நொய்யலில் வெள்ளப்பெருக்கு

உதகை/திருப்பூர்/உடுமலை: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழையால் உதகையில் 91 மில்லி மீட்டர் பதிவானது. நேற்று காலை சற்று ஓய்ந்திருந்த மழை, பிற்பகலுக்கு மேல் மீண்டும் வலுவடைந்தது.

கடும் குளிர் நிலவியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் குறைந்து, சாலைகள் வெறிச்சோடின. உதகை படகு இல்லம் சாலை ரயில்வே காவல் நிலையம் பகுதி அருகே கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் தேங்கியது. மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குன்னூர் காந்திபுரம் பகுதியில் நேற்று பெய்த கனமழையில் நடைபாதை மற்றும் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த இடத்தை வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டனர். அப்பகுதியில் ஒரு வீட்டின் பகுதி சேதமடைந்தது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.

கோத்தகிரி மார்க்கெட்டில் வழிந்தோடிய வெள்ளம் தாழ்வான இடங்களிலுள்ள கடைகளுக்குள்ளும் புகுந்ததால், வியாபாரிகள் சிரமத்துக்குள்ளாகினர். மேலும், குஞ்சப்பனையில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் மரம் முறிந்து கீழே விழுந்தது. கூக்கல்தொரை பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால், பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று மதியம் வரை குன்னூரில் 4, பந்தலூர், கோத்தகிரியில் தலா ஒன்று, உதகையில் 2 என மொத்தம் 8 வீடுகள் சேதமடைந்துள்ளன. அபாயகரமான நிகழ்வுகள் ஏற்பட்டால் நீலகிரி மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாகத்தை 1077 அல்லது 0423-2442344 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மழை அளவு (மி.மீ.): நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை வரையிலான நிலவரப்படி, உதகையில் அதிகபட்சமாக 91 மில்லி மீட்டர் மழை பதிவானது. கோடநாடு 81, கிளன்மார்கன் 74, கோத்தகிரி 71, குன்னூர் 57, பர்லியாறு 53, அவலாஞ்சி, எமரால்டு, கேத்தி, கீழ்கோத்தகிரி தலா 48, கிண்ணக்கொரை 47, நடுவட்டம் 46, குந்தா, கூடலூர் 45, தேவாலா, அப்பர் பவானி தலா 42, கெத்தை 40, மசினகுடி 39, கல்லட்டி 31, ஓவேலி 31, செருமுள்ளி 29, பாடந்தொரை 25, பந்தலூர் 23, சேரங்கோடு 22 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: திருப்பூர் மாவட்டத்தில கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, மாநகரில் டிஎம்எப் பாலத்தில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் நேற்று மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "டிஎம்எப் பாலத்தில் மழைநீர் தேங்குவது ஆண்டுக்கணக்கில் தொடர்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மழைநீர் தேங்கும் டிஎம்எப் பாலம் அமைந்துள்ள பகுதி, தற்போது வரை சரி செய்யப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது" என்றனர்.

இதேபோல, நேற்று காலை சாரலாக தொடங்கி, பின்னர் வேகமாக மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து, திருப்பூர் மாநகரில் 2-ம் நாளாக மிகவும் குளிர்ந்த காலநிலை நிலவியது. தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக காங்கயத்தில் 154 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆட்சியர் அலுவலகத்தில் 138, வட்டமலைக்கரை ஓடை அணை பகுதியில் 135 மி.மீ., வெள்ளகோவிலில் 130 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

வெள்ள அபாயம்: கீழ்பவானி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக, நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் வந்து கொண்டிருப்பதால், நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ள சர்க்கார் பெரியபாளையம் குளம், நொய்யல் ஒரத்துப்பாளையம் நீர்த்தேக்கம், முத்தூர் கதவணை ஆகியவற்றுக்கு எந்த நேரத்திலும் வெள்ள நீர் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது.

எனவே, நொய்யல் ஆறு மற்றும் அதன் துணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

17,000 கன அடி உபரிநீர் திறப்பு: அமராவதி அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் உபரியாக திறக்கப்பட்டது. இது தொடர்பாக பொதுப்பணித் துறையினர் கூறும்போது, "உடுமலையை அடுத்த அமராவதி அணை, அதன் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 88 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவுக்கு இணையாக, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று காலை நேர நிலவரப்படி அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி திறக்கப்பட்டது.

நேற்று மாலை நீர் வரத்து விநாடிக்கு 17,000 கன அடியாக அதிகரித்ததால், அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டது. கரையோர கிராம மக்கள் யாரும் ஆற்றில் இறங்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக அணைக்கு வரும் நீரின் அளவை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x