Last Updated : 12 Nov, 2022 05:50 PM

8  

Published : 12 Nov 2022 05:50 PM
Last Updated : 12 Nov 2022 05:50 PM

6 பேர் விடுதலையில் மத்திய அரசு தீவிர எதிர்ப்பைக் காட்ட தவறிவிட்டது: நாராயணசாமி

நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையில் மத்திய அரசு தீவிரமாக தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட தவறிவிட்டது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமான வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி சிறைவாசம் அனுபவித்தார்கள். ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தால் நளினி மற்றும் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாட்டை விஞ்ஞான நாடாக மாற்றுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மிகச் சிறப்பான முறையில் ஆட்சி நடத்திய ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது தீவிரவாதிகளால் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த நாடே அவருடைய இறப்புக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் மூலமாக தண்டிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அது மறுபடியும் ஆயுள் தண்டனையாக மாறியது. தமிழக அரசு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஒப்புதல் கொடுக்காத காரணத்தால் வழக்கு தொடரப்பட்டு பேரறிவாளன் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் விடுதலை செய்யப்பட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்ற ஒரு நிலையில் அதை பார்க்காமல் அவரை விடுதலை செய்தார்கள். பழைய தீர்ப்பின் அடிப்படையில் மொத்தம் 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இது அனைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மிகப்பெரிய மன வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசினுடைய வழக்கறிஞர் கலந்து கொள்ளாமல் மத்திய அரசினுடைய நிலையை சொல்லாமல் இருப்பது நரேந்திர மோடியின் அரசின் செயலற்றத்தன்மையை காட்டுகின்றது.

தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் இந்த விடுதலையை கொண்டாடுகின்றனர். அது மேலும் வேதனையை நமக்கு உருவாக்குகிறது. ஓர் அரசியல் கட்சியினுடைய மாபெரும் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு முழுமையான நீதி வழங்கியும் அதை நீதிமன்றம் என்ற போர்வையில் தட்டி பறிப்பது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.

மத்திய நரேந்திர மோடி அரசு அந்த 6 பேர்களுடைய விடுதலை சம்பந்தமான மனுவில் தங்களுடைய தீவிரமான எதிர்ப்பை காட்டி இருக்க வேண்டும். மத்திய அரசு தவறிவிட்டது. மற்ற அரசியல் கட்சியினுடைய தலைவர் படுகொலை செய்யப்பட்டால் அந்தக் கட்சியினர் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்களா? சில அரசியல் கட்சிகள் அடிக்கடி தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்கின்ற போக்கு பெரும் வேதனை தருகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

காங்கிரஸ் கட்சியினுடைய மிகப்பெரிய தலைவர்களில் இருந்து சாதாரண தொண்டன் வரை இந்த தீர்ப்பை முழுமையாக நாங்கள் எதிர்க்கின்றோம். குறிப்பாக, சில அரசியல் கட்சிகள் தலைவரை இழந்து வாடுகின்ற அந்தக் கட்சி தொண்டர்களுடைய உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தியினுடைய துணைவியார் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அவர்களை மன்னித்து விட்டோம் என்று கூறியிருப்பதாக சிலர் பேசுகின்றார்கள். இது அந்த தலைவர்களுடைய பெருந்தன்மையை காட்டுகிறது. ஆனால், ஒரு கட்சியின் தொண்டன் என்ற முறையிலே ராஜீவ் காந்தியினுடைய படுகொலையை கண்டித்து முழுமையான நீதி கிடைக்கின்ற வரை நாங்கள் போராடுவோம்’’ என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x