Published : 12 Nov 2022 03:26 PM
Last Updated : 12 Nov 2022 03:26 PM
சென்னை: பழங்குடியினர் சாதிச்சான்று சரிபார்க்க 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட மாநில அளவிலான சரிபார்ப்புக் குழுவின் செயல்பாடுகளுக்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த லலிதாகுமாரி, எல்ஐசி நிறுவனத்தில், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்தார். அவருக்கு திருத்தணி தாசில்தாரர் அளித்த பழங்குடியினர் சாதிச்சான்றை சரிபார்ப்பதற்காக, எல்ஐசி நிறுவனம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தது. இந்தச் சான்றிதழை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், லலிதாகுமாரி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல எனக் கூறி அவரது சாதிச் சான்றிதழை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதிச் சான்றிதழை சரிபார்க்கும்படி மாநில அளவிலான குழுவுக்கு கடந்த 1998-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, லலிதா குமாரியின் சான்றிதழை சரிபார்த்து, சாதிச் சான்றிதழை உறுதி செய்து 2020-ம் ஆண்டு மாநில அளவிலான குழு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தனக்கு உரிய பதவி உயர்வுகளும், பணப்பலன்களும் வழங்கக் கோரி லலிதா குமாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, லலிதாகுமாரியின் சாதிச் சான்று சரிதான் என உத்தரவிட்டுள்ளதால், அவருக்குரிய அனைத்து பணி மற்றும் பணப்பலன்களை வழங்கும்படி எல்ஐசி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
மேலும், சாதிச் சான்றை சரி பார்க்க 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட மாநில அளவிலான சாதிச்சான்று சரிபார்ப்புக் குழுவின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சான்றிதழ் சரிபார்க்கும் பணியின் தீவிரம், அதிகாரம் மற்றும் பொறுப்பு குறித்து, இப்பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இதுவே தக்க தருணம் என ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT