Published : 12 Nov 2022 01:08 PM
Last Updated : 12 Nov 2022 01:08 PM
சென்னை: பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள், சமூகநீதி தத்துவத்தின் உண்மை விழுமியங்களை சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.12) அனைத்துக் கட்சித் கூட்டம் பெற்றது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எனப்படுவது - இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதி தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளில் சாதிப் பிரிவினையைக் கற்பித்துப் பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும், நாங்கள் அதனை நிராகரிக்கிறோம். இதுகுறித்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூகநீதியினையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையைப் போக்கும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள், சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம். சமூகநீதித் தத்துவத்தைக் காக்கத் தமிழ்நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...