Published : 12 Nov 2022 12:52 PM
Last Updated : 12 Nov 2022 12:52 PM

'மழைநீர் வடிகால் பணிகள் முடியும் வரை ஒப்பந்ததாரர்களை அனுசரித்துதான் செல்ல வேண்டும்' - அமைச்சர் கே.என்.நேரு

வடிகால் பணிகளை பார்வையிடும் அமைச்சர்கள், அதிகாரிகள்

சென்னை: பணிகள் முடியும் வரை ஒப்பந்ததாரர்களை அனுசரித்துதான் செல்ல வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தெருவில் தேங்கிய மழை நீரை மின்மோட்டார் உதவியுடன் வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று( நவ.12) காலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "தண்ணீர் தேங்கும் இடங்களில் மோட்டார் பம்பு மூலமாக அகற்ற பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்கல் வாரியதுடன் இணைந்து பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து, சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னது போல் மக்கள் துயரம் நிரந்தரமாக நீங்கும். மசூதி காலனி, ராஜமன்னார் காலணி பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. தற்போது தண்ணீர் தேங்கவில்லை.

காலையில் அடையாறில் எட்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஒரு மணி நேரத்தில் தண்ணீரை வடியும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வடியாத இடத்தில் தான் மோட்டார் பம்புகளை வைத்து அகற்றி வருகிறோம். அப்படி மோட்டார் பம்புகள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பகுதிகளில் வடிகால் அமைத்து நிரந்தரமாக தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வடசென்னை பகுதியில் இரண்டு இடங்களில் மட்டும், அதுவும் அங்கு மழைநீர் வடிகால் இல்லாத காரணத்தினால் தண்ணீர் தேங்கியது. அதையும் வெளியேற்றி வருகிறோம். ஒருமுறை தவறு செய்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. மூன்று முறை நோட்டீஸ் அளிக்க வேண்டும். அது மட்டும் இன்றி ரத்து செய்த பின்பு மீண்டும் டெண்டர் விட வேண்டும். அப்படி விடும் பொழுது நிதி ( rate) பத்து சதவீதம் அதிகரித்து விடும் இதன் காரணமாக ஒப்பந்ததாரரை பணி முடியும் வரைக்கும் அனுசரித்து செல்ல வேண்டும். அனுசரித்து செல்ல வேண்டும் என்றால் ஆள் பற்றாக்குறையாக இருந்தால் அல்லது அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவர்கள் தேவையை பூர்த்தி செய்து அவர்களையே பணி செய்து முடிக்க வைப்பது தான். மீண்டும் டெண்டர் விடப்பட்டால் மூன்று மாதங்கள் எடுக்கும் இதனால் மூன்று மாதங்கள் பணி நின்ற விடும் பணிகள் மூன்று மாதம் தாமதம் ஆகும்" இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x