Published : 13 Jul 2014 10:00 AM
Last Updated : 13 Jul 2014 10:00 AM

மின் கட்டணம் செலுத்த ‘பிரீபெய்டு’ திட்டம்: உடனடியாக அமல்படுத்த மின் வாரியம் தீவிரம்

கடைசிநேர நெருக்கடியைத் தவிர்க்க, முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மின் நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு (ரீடிங்) எடுக்கப்படுகிறது. மின் பயன்பாட்டுக்கான கட்டணத்தை தங்கள் பகுதிக்குட்பட்ட மின் வாரிய அலுவலகங்களில் செலுத்த வேண்டும். இதுதவிர இணையதளம், தபால் அலுவலகம் மற்றும் வங்கி மூலமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கணக்கீடு எடுத்த 20 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராத கட்டணம் மற்றும் இணைப்பு மீட்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மின் வாரிய கணக்கீட்டாளர்கள், கையடக்க கருவி மூலம் மின் கட்டணத்தை கணக்கிட்டு, 2 நாட்களுக்குள் அவற்றை பிரிவு அலுவலகத்தில் உள்ள வசூல் மைய கணினியில் பதிவேற்றம் செய்கின்றனர். கணக்கீடு எடுத்த நாளிலோ மறுநாளோ நுகர்வோர் பணம் கட்டச் சென்றால், கணினியில் இன்னும் பதிவேற்றம் செய்யவில்லை என்று கூறி திருப்பி அனுப்பும் நிலை உள்ளது.

சிலர் வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் கணக்கீடு எடுத்ததும் பணம் கட்ட செல்வதுண்டு. ஆனால், கணினியில் பதிவேற்றம் செய்ய தாமதம் ஆவதால் பணம் கட்ட முடியாமல் திரும்புகின்றனர். சிலர் கையில் பணம் இருக்கும்போதே மின் கட்டணத்தை கட்டிவிடலாம் என நினைக்கின்றனர்.

இதுபோன்ற பல்வேறு காரணங்கள் அடிப்படையில், நுகர்வோர் பயன்பெறும் வகையில் முன்கூட்டியே கட்டணத்தை பெறும் முறையை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த மின் வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

நுகர்வோர் முன்கூட்டியே மொத்தமாக மின் கட்டணம் செலுத்தும் முறை அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்து வட்ட மின் வாரிய பொறியாளர்களுக்கும் வழிகாட்டு தல்கள் வழங்கப்படுகிறது.

முன்கூட்டிய பணம் செலுத்தும் திட்டத்தில், நுகர்வோர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம். அந்தப் பணம் மின் கணக்கீடு நாளுக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்பு இருந்தால், அந்தக் காலத்துக்கு ஆண்டுக்கு ஒன்பது சதவீத வட்டி கணக்கிட்டு வழங்கப்படும்.

முன்கூட்டி செலுத்தப்படும் பணம், அந்த மாத கணக்கீட்டில் கழிக்கப்படும். குறைவாக கட்டியிருந்தால், மீதமுள்ள பணம் மட்டும் வசூலிக்கப்படும். கடைசி நேர நெரிசல் மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு, அபராதம் போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க முன்கூட்டியே பணம் செலுத்தி நுகர்வோர் பலனடையலாம். இந்த வசதி மின் வாரிய அனைத்து பிரிவு அலுவலகங்கள் மற்றும் ஆன்லைனிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x