Published : 12 Nov 2022 04:36 AM
Last Updated : 12 Nov 2022 04:36 AM

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: விழாவில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தோளில் கைவைத்து கனிவுடன் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி. படம்: பிடிஐ

திண்டுக்கல்: கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:

காந்தி விரும்பிய மொழி தமிழ்: குஜராத்தில் பிறந்து, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாகத் திகழும் காந்தியடிகளுக்கும், தமிழகத்துக்குமான தொடர்பு மிக மிக அதிகம். தன்னுடைய வாழ்நாளில் 26 முறை தமிழகத்துக்கு வந்துள்ள மகாத்மா காந்தி, தமிழை விரும்பிக் கற்றவர். காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டவர். திருக்குறளை படிப்பதற்காகவே தமிழை கற்க வேண்டும் என்று சொன்னவர்.

உயர் ஆடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த அவரை, தமிழ் மண் அரை ஆடைக்கு மாறவைத்தது. வட இந்தியர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும், அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள். அத்தகைய காந்தியடிகள் பெயரில் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழா சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடியை தமிழகம் சார்பில் வரவேற்கிறேன்.

கல்வியின் வழியாக மனிதரை சமூகத்துக்குப் பயனுள்ளவராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, கிராமங்கள் உயர நாடு உயரும் என்ற காந்தியடிகளின் கொள்கை அடிப்படையில் அவரது சீடர்கள் டாக்டர் ஜி.ராமச்சந்திரன், அவரது துணைவியார் எஸ்.சவுந்தரம் ஆகியோரால் தொடங்கப்பட்ட கிராமிய பயிற்சி நிறுவனம், இன்று நிகர்நிலை பல்கலைக்கழகமாக விளங்குகிறது.

பல்வேறு கல்வித் திட்டங்கள்: நாட்டிலேயே தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது. இதை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் பல்வேறு கல்வித் திட்டங்களை செயல்படுத்துகிறது. அனைவரும் உயல்கல்வி படிக்க, பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க உயர்கல்வி உறுதித் திட்டம், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. தமிழக எல்லையைத் தாண்டி, அனைத்து மாநிலங்களும் தமிழக அரசின் கல்வித் திட்டங்களை உன்னிப்பாகக் கவனிக்கின்றன.

கல்வி மட்டுமே சொத்து. எந்த சூழ்நிலையிலும் யாராலும் பறிக்க முடியாது. கல்வியை வழங்குவது மாநில அரசின் கடமை. அதனால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டுவர வேண்டும். மாநில அரசின் இத்தகைய முயற்சிகளை ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும், மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தபோது, ​​கல்வி முதலில் மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டது. அவசர காலத்தின்போது மத்திய அரசு பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. காந்தி நெறிமுறைகளை கடைபிடிப்பவர்களாகவும், அதை பரப்புரை செய்கிறவர்களாகவும் இன்றைய இளைய சமுதாயம் செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். விழாவில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x