Published : 12 Nov 2022 04:39 AM
Last Updated : 12 Nov 2022 04:39 AM
திண்டுக்கல்: பெங்களூருவில் இருந்து பிரதமர் மோடி நேற்று தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் அருகே அம்பாத்துரையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு பிற்பகல் 3.45 மணிக்கு வந்தார்.
அங்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமரை வரவேற்றனர். தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்துக்கு பிரதமர் மோடி காரில் சென்றார்.
பிரதமர் மற்றும் முதல்வரை வரவேற்க காலை முதலே காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள சாலையில் திமுக, பாஜக தொண்டர்கள் பொதுமக்கள் குவிந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி மேளதாளங்களுடன் பிரதமர், முதல்வரை வரவேற்றனர்.
பாதுகாப்பு கருதி தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அவர்களது உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்தபின் போலீஸார் அனுமதித்தனர். அப்போது தீப்பெட்டி, தண்ணீர் பாட்டில், கருப்புக் குடைபோன்ற பொருட்களை எடுத்துச்செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை.
ஓபிஎஸ், இபிஎஸ் வரவேற்பு: முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிமுக இடைக்கால பொதுச்செயலர் இபிஎஸ், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக வரவேற்றனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை: பிரதமர் நரேந்திர மோடியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கல்லில் தொண்டர்களுடன் தொண்டராக நின்று வரவேற்றார். பட்டமளிப்பு விழா முடிந்ததும், பிரதமருடன் காரில் வந்த அண்ணாமலை, மதுரை விமான நிலையத்தில் பிரதமரை வழியனுப்பி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT