Published : 12 Nov 2022 06:57 AM
Last Updated : 12 Nov 2022 06:57 AM
திருவள்ளூர்: கனமழையால் சென்னைக்கு குடிநீர் தரும் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் உபரிநீர் திறப்பு விநாடிக்கு 569 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர பூண்டி, சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரி முழு கொள்ளவை எட்டி உபரி நீரி திறக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு வடகிழக்கு பருவமழையால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 2 -ம் தேதி முதல், ஒரு ஷட்டர் மூலம் விநாடிக்கு 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி, விநாடிக்கு 3,070 கனஅடி நீர் வந்தது.
இதனால், 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 2,763 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் 18.76 அடி நீர்மட்டமும் இருந்தது. இதன்காரணமாக புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரின் அளவு நேற்று அதிகரிக்கப்பட்டது. இதன்படி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான ராஜாராமன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில், விநாடிக்கு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த உபரி நீர், தற்போது 2 ஷட்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அப்போது, செய்தியாளர்களிடம் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளதால், மாவட்டத்தில் உள்ள சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கையாக புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை, 044-27664177, 044-27666746 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் வாட்ஸ் ஆப் எண் 9444317862 ஆகியவற்றில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்ரின் சரண்யா, நீர்வளத் துறையின் கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம் உடனிருந்தனர். மேலும், சென்னைக்கு குடிநீர் தரும் மற்ற ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அந்த ஏரிகளின் நீர்இருப்பு உயர்ந்துள்ளது. இதில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 530 கனஅடி நீர் வருகிறது. இதனால், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 1,079 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்டம் 26.60 அடியாகவும் உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 419 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே, சோழவரம் ஏரியின் நீர்இருப்பு 320 மில்லியன் கனஅடியாகவும் நீர்மட்டம் 8.21 அடியாகவும் இருக்கிறது.
இதேபோல் 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 36.61 அடி உயரம் உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 130 கனஅடி மழைநீர் வருவதால், அந்த ஏரி முழுமையாக நிரம்பி, விநாடிக்கு 125 கனஅடி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 697 கனஅடி நீர் வருகிறது. ஆகவே, 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவும் 24 அடி உயரமும் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்இருப்பு 2,598 மில்லியன் கனஅடியாகவும் நீர்மட்டம் 19.98 அடியாகவும் உள்ளது. விநாடிக்கு 569 கனஅடி உபரி திறக்கப்பட்டு வருவதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT