Published : 12 Nov 2022 06:20 AM
Last Updated : 12 Nov 2022 06:20 AM
திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் அருகே ஆண்டுக்கணக்கில் பராமரிப்பின்றி கிடக்கும் இளைஞர் விடுதியை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் அருகே மத்திய அரசின் இளைஞர் நலத் துறை சார்பில் இளைஞர் விடுதி உள்ளது. ஒரே சமயத்தில் 80 பேர் தங்கும் வகையில் 2 தளங்களுடன் அமைந்துள்ள இந்த விடுதியில் தங்குவதற்கு நாளொன்றுக்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டதால், வெளியூரிலிருந்து திருச்சிக்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வருவோர், அருகிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம், அரசு சட்டக் கல்லூரி, தந்தை பெரியார் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி போன்றவற்றில் நடைபெறும் கருத்தரங்கம், பயிற்சி முகாம்களில் பங்கேற்க வரும் மாணவர்கள், இளைஞர்கள் மிகவும் பயனடைந்து வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசின் சார்பில் பராமரிப்பாளர் நியமிக்கப்படாமல் இருந்ததால், இந்த விடுதியை அண்ணா விளையாட்டரங்க அதிகாரிகளே மேற்பார்வையிட்டு, தற்காலிகமாக பராமரித்து வந்தனர். ஆனால், கரோனா தொற்று பரவல் காலத்தில் இந்த விடுதி முற்றிலும் மூடப்பட்டது. பின்னர் கரோனா தொற்றுப் பரவல் அபாயம் நீங்கி, இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையிலும், இந்த இளைஞர் விடுதி மீண்டும் திறக்கப்படவில்லை. இக்கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும், ஆண்டுக்கணக்கில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததாலும் இளைஞர் விடுதி கட்டிடம் சேதமடைந்துள்ளது. மேலும், வளாகம் முழுவதும் ஆங்காங்கே செடி கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் இந்த விடுதி தற்போது சிதிலமடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து நேரு யுவகேந்திரா தரப்பினரிடம் கேட்டபோது, “நீண்டகாலமாக பராமரிப்பின்றி கிடந்த இக்கட்டிடத்தை தற்போது மீண்டும் நேரு யுவகேந்திராவின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம். முற்றிலுமாக பயன்படுத்த முடியாத நிலையில் விடுதி கட்டிடம் உள்ளது. எனவே, முழுமையான புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இந்த கட்டிடத்தை ஆட்சியர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டுச் சென்றுள்ளார். விரைவில் மத்திய அரசின் நிதி பெற்று விடுதியை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றனர். இதுகுறித்து ஆட்சியர் மா.பிரதீப் குமாரிடம் கேட்டபோது, ‘இளைஞர் விடுதியை ஆய்வு செய்துள்ளேன். அதை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT