Published : 11 Nov 2022 09:16 PM
Last Updated : 11 Nov 2022 09:16 PM
புதுச்சேரி: தொடர் கனமழை பொழிவால் புதுச்சேரியில் ஏரிகள், படுகை அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மழைபொழிவால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. பாதாள மின் இணைப்பு பழுதால் ஒரே தெருவில் பல வீடுகளில் மின்சாதனங்கள் முழுமையாக பழுதடைந்தன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவானதால் புதுச்சேரியில் மழை பொழிவு அதிகளவில் உள்ளது. குறிப்பாக கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பொழிவு இருந்து வருகிறது. தொடர் மழையால் தாழ்வான இடங்கள், சாலைகள், விவசாய நிலங்களில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து, மழை பெய்து வருவதால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இவற்றை பொதுப்பணித் துறையின் நீர்பாசக கோட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் ஊசுடு ஏரி, பாகூர் ஏரி உள்ளிட்ட 84 ஏரிகள் உள்ளன. இதில் பாகூர், முருங்கப்பாக்கம், உழந்தை, கீழ்ப்பரிக்கல்பட்டு, மணப்பட்டு, உச்சிமேடு, மேல் பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், பாகூர் சித்தேரி, அரங்கனூர், சேலியமேடு, கடுவனூர் ஒட்டந்தாங்கல் உள்ளிட்ட பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
இதேபோல் சுண்ணாம்பாறு படுகை அணை, கீழூர் அணைக்கட்டு, மங்கலம் அணைக்கட்டு, திருக்காஞ்சி, கோர்க்காடு, கீழ் அக்ரகாஹரம், உறுவையாறு, சிவராந்தகம், நெட்டப்பாக்கம், வடுக்குப்பம், குமாரபாளையம், சோரப்பட்டு, சகடப்பட்டு உள்ளிட்ட படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன. இன்னும் ஒரிரு நாட்களில் ஏரிகள், படுகை அணைகளில் பல முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.
ஒரே தெருவில் பல வீடுகளில் மின்சாதனங்கள் பழுது: தொடர் மழையால் புதுச்சேரியில் பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் பழுது சரிபார்க்கப்பட்டு உடனுக்குடன் தர மின்துறையும் முழு நடவடிக்கை எடுத்து வந்தது. இச்சூழலில் முதலியார்பேட்டை சாமிநாதப்பிள்ளை வீதியில் பாதாள மின் இணைப்பு (Underground Cable) பழுதாகி, அந்த தெரு முழுவதும் உள்ள வீடுகளில் டிவி, பிரிட்ஜ், ஃபேன், கிரைண்டர், மின் மோட்டார், பல்புகள் உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் பழுதாகிவிட்டன.
அப்பகுதி மக்கள் மின் துறைக்கு தகவல் தெரிவித்தவுடன் மின்துறை ஊழியர்கள் உடனடியாக வந்து அனைத்து வீடுகளிலும் கொடுக்கப்பட்டுள்ள பாதாள மின் இணைப்பை துண்டித்து, மின் கம்பத்திலிருந்து வரும் மின் இணைப்பை கொடுத்து, கொட்டும் மழையிலும் மூன்று மணி நேரத்தில் சரி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT