Published : 11 Nov 2022 05:50 PM
Last Updated : 11 Nov 2022 05:50 PM

“தமிழத்தில் பெண்கள் சக்தியின் தீவிரத்தை நான் காண்கிறேன்” - பிரதமர் மோடி பேச்சு

பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி

சென்னை: “காந்தியின் ‘கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி’ என்பதுதான் அரசின் கவனமாக உள்ளது. தமிழத்தில் பெண்கள் சக்தியின் தீவிரத்தை நான் காண்கிறேன்” என்று பிரதமர் மோடி பேசினார்.

திண்டுக்கலில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், "இன்று பட்டம் பெறும் அனைத்து இளைய மற்றும் பிரகாசமான மனங்களை நான் வாழ்த்துகிறேன். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் தியாகத்தால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

மகாத்மா காந்திக்கான சிறந்த அஞ்சலி அவரது இதயத்திற்கு நெருக்கமான சிந்தனைகளுக்காக பணியாற்றுவதாகும். நீண்டகாலமாக காதி நிராகரிக்கப்பட்டு வந்தது. 'தேசத்துக்காக காதி, அழகிய ஆடைகளுக்காக காதி' என்ற அறைகூவலுக்கு பின் அது மிகவும் பிரபலமானது. காதி பொருட்களின் விற்பனை 300% அதிகரித்துள்ளது. உலகளாவிய ஆடைகள் தயாரிப்பு தொழில்துறையும் கூட காதியை சிறப்புடையதாக எடுத்துக்கொண்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளாகும்.

ஊரக வளர்ச்சி என்ற மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையை புரிந்துகொள்வது முக்கியமானதாகும். மாண்புகள் மற்றும் நெறிமுறைகளுடன் ஒட்டுமொத்த வளர்ச்சியை அவர் விரும்பினார். காதி என்பதை கிராமங்களின் தற்சார்புக்கான கருவியாக மகாத்மா காந்தி பார்த்தார். தற்சார்புள்ள கிராமங்களின் தற்சார்பு இந்தியாவின் விதைகளை அவர் கண்டார். அவரால் ஊக்கம்பெற்ற நாங்கள் தற்சார்பு இந்தியாவை நோக்கி பணியாற்றி வருகிறோம்.

மகாத்மா காந்தியின் ‘கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி’ என்பது தற்போதைய அரசின் கவனத்துக்குரிய பகுதியாக உள்ளது. நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பயன்கள் இன்று கிராமப்பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன. இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்கும் 6 லட்சம் கி.மீ. கண்ணாடி இழை கேபிள் சென்றடைந்துள்ளது. நகரப்பகுதிகளுடன் ஒப்பிடும்போது கிராமப் பகுதிகளில் இணையதளம் கூடுதல் வேகத்தோடு செயல்படுகிறது.

ஒரே வகையான பயிரிடுதல் என்பதிலிருந்து வேளாண்துறையை பாதுகாக்க வேண்டிய காலம் வந்துள்ளது. நாம் மீண்டும் கொண்டு வருவதற்கு உகந்த ஊட்டச்சத்துமிக்க, பருவநிலையை தாக்குப் பிடிக்கின்ற பல சிறுதானியங்கள் உள்ளன. பலவகையான தானியங்கள் பயிரிடுதல் என்பது மண்ணை பாதுகாத்து, தண்ணீரை சேமிக்கும்.

தமிழத்தில் பெண்கள் சக்தியின் தீவிரத்தை நான் காண்கிறேன். இளம்பெண்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பதை நான் காண்கிறேன். இந்த நூற்றாண்டின் நெருக்கடியான கரோனா பெருந்தொற்றை உலகம் எதிர்கொண்ட போது இந்தியா மீட்சியுடன் மேலெழுந்தது. நீங்கள் புதிய இந்தியாவை கட்டமைப்பவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு தலைமையேற்கும் பொறுப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்" என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x