Published : 11 Nov 2022 04:52 PM
Last Updated : 11 Nov 2022 04:52 PM

காலாவதியான மருந்துகளை வைத்திருந்தால் துறை ரீதியான நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “காலாவதியான மருந்துகள் வைத்திருப்பது குறித்து அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனரகத்தில் எலிக்காய்ச்சலை கண்டறியக்கூடிய லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகத்தை மருத்துவ அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "டி.எம்.எஸ்.வளாகத்தில் லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 இடங்களில் இந்த ஆய்வகம் உள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை எலி காய்ச்சலை கண்டறிய எலிசா என்ற பரிசோதனை உதவியது. இனி எலி காய்ச்சல் நோய் குறித்து கண்டறிய லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் உதவியாக இருக்கும்.

எலி காய்ச்சல் நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய். சிறுநீரகம், நுரையீரல் உள்ளிடவற்றை பாதிக்கும். எலி காய்ச்சலால் தமிழகத்தில் 2018ம் ஆண்டு 2 பேர் மரணம் அடைந்தனர். இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் பேரில் 10 பேர் எலி காய்ச்சல் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலத்தில் வெறும் காலில் நடந்தால் எலி காய்ச்சல் பாதிப்பு வருகிறது. சிறிய அளவிலான காய்ச்சல், கண் எரிச்சல், கண் சிவத்தல் எலி காய்ச்சல் அறிகுறி, உடனே சிகிச்சை எடுத்து கொண்டால் பாதிப்பு இருக்காது.

காலாவதியான மருந்து கையிருப்பு வைந்திருந்தால் அது குற்றமாகும். காலாவதியான மருந்துகள் வைத்திருப்பது குறித்து அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னையில் கால்பந்து விளையாட்டு வீராங்கனை கால் அகற்றம் குறித்தான கேள்விக்கு முறையான சிகிச்சை அளித்தோம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கவனக் குறைவால் தவறு நடந்திருந்தால் விசாரணைக்கு பின் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

டெங்கு பாதிக்கப்பட்டு தமிழகத்தில் 377 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2017 - 18 ஆண்டில் டெங்கு உயிரிழப்பு அதிகம். கடந்த 11 மாதங்களில் 4 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. டெங்கு பாதிப்பை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்" என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x