Published : 11 Nov 2022 03:30 PM
Last Updated : 11 Nov 2022 03:30 PM
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ராமதாஸ், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: “ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. 6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.”
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: “தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நிலைப்பாட்டிற்கு விரோதமாக பேரறிவாளன் விடுதலை, நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி, உச்ச நீதிமன்றம் விடுதலை செய் துள்ளதை வரவேற்கிறோம். ஏற்கெனவே தந்த தீர்ப்பையொட்டி, உச்சநீதிமன்றம் இதனைத் தந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது - சட்டப் பிழை என்பதற்கான சான்றே இந்தத் தீர்ப்பு! உச்ச நீதிமன்றத்தின் இந்த இரண்டு ‘குட்டு’கள் போன்ற நடவடிக்கைக்குப் பிறகாவது தமிழ்நாடு ஆளுநர், பதவி விலகுவாரா என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்!
இனியாவது அரசமைப்புச் சட்டக் கடமையிலிருந்து (161 ஆவது பிரிவின்படி) தவறாமல் ஆளுநர்கள் நடக்கவேண்டும்.”
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “ராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்புக்காக சட்டப் போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பேரன்பும்!”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT