Published : 11 Nov 2022 02:13 PM
Last Updated : 11 Nov 2022 02:13 PM
மதுரை: பிரதமர் மோடி வருகையொட்டி மதுரை விமான நிலையப் பகுதியில் சாரல் மழை பெய்துவரும் நிலையில், சாலை வழி மார்க்கமாக செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க இன்று பிற்பகல் 2.40 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்து ஹெலிகாப்டர் மூலமாக சின்னாளப்பட்டி சென்று அங்கிருந்து காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இடத்திற்கு செல்கிறார். இதன் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட முழுவதுமாக பரவலான மழை பெய்துவரக்கூடிய நிலையில் விமான நிலைய பகுதியில் சாரல் மழை பெய்துவருகிறது.
இந்நிலையில் மதியம் பிரதமர் மோடி விமான நிலையம் வருகை தரும் நேரத்தில் மழை பெய்தாலோ, மேக மூட்டம் அதிகரித்து காணப்பட்டலோ, அதற்கு தகுந்த வகையில் சாலை மார்க்கமாக பிரதமர் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு தடுப்பு போலீஸார் மற்றும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
மேலும் விமான நிலையம் பாதுகாப்பு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டு விமான நிலைய சுற்றுவட்டார உள்ள கிராமங்களில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளிலும், தங்கும் விடுதிகளில் பராமரிப்பற்ற கட்டிடங்களிலும் காவல்துறையினர் சோதனை செய்துவருகின்றனர். மேலும் மாவட்ட முழுவதிலும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்தும் மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் வரையிலான சாலைகளில் வழிநெடுகிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பெருங்குடி பகுதியில் இருந்து விமான நிலையப் பகுதிக்கு இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்திற்கான பயண சீட்டு மற்றும் அடையாள அட்டை வைத்துள்ள கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும் விமான நிலையம் அருகே வசிக்ககூடிய பொதுமக்கள் ஆதார் எண்ணை காண்பித்து உறுதிசெய்த பின்னரே தெருக்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெருங்குடி சந்திப்பில் இருந்து விமானநிலையம் வரை பிரதமரின் வாகனம் வருகை தந்தால் பொதுமக்கள் சாலைகளுக்கு வந்திடாத வகையில் சாலைகளின் இரு புறங்களிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. பெருங்குடி முதல் விமானநிலையம் வரை எந்த வாகனங்களையும் சாலையோரங்களில் நிறுத்திசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை விமான நிலையம் முதல் திண்டுக்கல் வரையிலும் அடுத்தடுத்து தமிழக காவல்துறையினர், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலைய ஓடுதளம் பகுதி, பயணிகள் நுழைவாயில் பகுதி, மதுரை முதல் திண்டுக்கல் வரையிலான நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் சாலையை ஒட்டியுள்ள கட்டிடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலைய ஓடுதளம் பகுதி முழுவதிலும் கண்காணிப்பு கோபுரம் மூலமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.
மதுரை விமான நிலையம் தொடங்கி திண்டுக்கல் வரை நெடுஞ்சாலைகளில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், துணை ராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் அலங்காநல்லுார், சத்திரப்பட்டி,நத்தம் வழியாக செல்லவும் மாற்றுப்பாதைகள் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் காரியாபட்டி, எலியார் பத்தி, சிந்தாமணி வழியாக செல்லவும் திருச்சி மற்றும் வட மாவட்டங்களில் இருந்து செல்லும் பேருந்துகள் திருப்புவனம், காரியாபட்டி வழியாக செல்லவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலை முழுவதுமாக சாலையோரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திண்டுக்கல் சென்று மதுரை விமான நிலையம் திரும்பும் வரையிலும் இந்த பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...