Published : 11 Nov 2022 02:06 PM
Last Updated : 11 Nov 2022 02:06 PM

பேரறிவாளன் விடுதலைத் தீர்ப்பை பின்பற்றியே 6 பேரும் விடுதலை: வழக்கறிஞர் தகவல்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தீர்ப்பை பின்பற்றியே நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபு கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபு கூறும்போது, "பேரறிவாளன் வழக்கில் கடந்த 18.5.2022 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை பின்பற்றி, இந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேருக்கும் மனு தாக்கல் செய்திருந்தோம்.

ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தனுக்கு எங்களது தரப்பிலும், ரவிச்சந்திரன், நளினி மற்றும் முருகன் தரப்பிலும் தனித்தனியாக வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். இந்த 6 பேரின் மனுக்களையும் ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம் இன்று அவர்களை விடுதலை செய்துள்ளது.

18.5.2022 அன்று உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது. அந்த தீர்ப்பில், அவருடைய வயது, எத்தனை வருடம் சிறையில் இருந்தார், சிறையில் அவரது நன்னடத்தை, உடல் ரீதியான பிரச்சினை இவற்றையெல்லாம் பரிசீலித்து விடுதலை செய்திருந்தனர். இவற்றையே தற்போதும் பின்பற்றி மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x