Published : 11 Nov 2022 12:51 PM
Last Updated : 11 Nov 2022 12:51 PM

குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளின் உழுவடை உரிமையை பாதுகாக்கவும்: முத்தரசன்

முத்தரசன் | கோப்புப் படம்

சென்னை: கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் உழுவடை உரிமையை பாதுகாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகம் முழுவதும் கோயில், மடம் மற்றும் தர்ம ஸ்தாபனங்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காலங்காலமாக குத்தகை சாகுபடி செய்து வருகிறார்கள். குத்தகை விவசாயிகளுக்கு கோயில் நிர்வாக செயல் அலுவலர்கள் முறையான ஆவணங்கள் வழங்காத நிலையில் இயற்கை சீற்றக் காலங்களில் அரசு வழங்கும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நிவாரண உதவிகளையும், நலத்திட்டப் பயன்களையும் குத்தகை விவசாயிகள் பெற முடியாத அவலநிலை தொடர்கிறது.

செயல் அலுவலர்களின் ஒப்புதல் அல்லது ஆட்சேபணையில்லா சான்றிதழ் கிடைக்கப் பெறாததால் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் கோயில் நில குத்தகை விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும் முறையில் குத்தகை விவசாயிகள் வசம் உள்ள நிலங்களை ‘பொது ஏலம்’ விடுவதாக கோயில் செயல் அலுவலர்கள் நாளேடுகளில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் நாளேடுகளில் வெளியிட்ட அறிவிப்பு இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு நிற்கும் காவிரி பாசன பகுதி நில குத்தகை விவசாயிகளிடம் கடுமையான பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழிவழியாக கோயில் நில குத்தகை பெற்றுள்ள விவசாயிகள் உரிமையை பறிக்கும் பொது ஏலம் அறிவிக்கும் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையும், தமிழக அரசும் தலையிட்டு கோயில் நிர்வாகத்தின் ஏல அறிவிப்புகளை ரத்து செய்யுமாறும், கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் உழுவடை உரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆண்டுகளுக்குரிய குத்தகை பாக்கியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது." என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x