Published : 11 Nov 2022 12:27 PM
Last Updated : 11 Nov 2022 12:27 PM
திருவள்ளூர்: தொடர்மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு 100 அடியிலிருந்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் புழல் ஏரி முக்கிய பங்கு வகித்து வருகிறது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் இன்று (நவ.11) காலை நிலவரப்படி 2738 மில்லியன் கன அடி நீர் நிரம்பியிருந்தது.
ஏரிக்கு விநாடிக்கு 558 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 158 கனஅடி வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக புழல் ஏரிக்கு வரும் நீர் அதிகரித்தது.
இதையடுத்து இன்று காலை 10.30 மணியிலிருந்து 100 கனஅடி அளவில் வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீரின் அளவு 500 கன அடியாக அதிகரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்திருந்தது. நேற்று இரவு முதலே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT