Published : 11 Nov 2022 12:02 PM
Last Updated : 11 Nov 2022 12:02 PM
சென்னை: மோட்டார் பம்புகளைப் பொருத்தி துரிதமாக மழை நீரை வெளியேற்றி வருவதே வடசென்னையின் புளியந்தோப்பு, பட்டாளம், கொளத்தூர் பகுதிகளில் மழை நீர் தேங்காதற்கான காரணம் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அவசர கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, துறையின் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, "சென்னையில் மழைநீர் தேங்குவதாக 34 புகார்கள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. நேற்று இரவு முதல் இன்று காலை 8.30 மணி வரை 64.5 மி.மீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் மழையின் காரணமாக தற்போது வரை விழுந்த 92 மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து 16 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை.கொளத்தூர் பகுதியில் மட்டும் 82 மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன. 906 மோட்டார்கள் சென்னை மாநகராட்சியின் சார்பில் தயார் நிலையில் உள்ளன.
பட்டாளம் பகுதியில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமான பணி முடிந்தால் இனி எப்போதும் பட்டாளம் பகுதியில் மழை நீர் நிற்காது. இன்றைய மழையில் புளியந்தோப்பு, பட்டாளம், பெரம்பூர், கொளத்தூர் பகுதிகளில் மழை நீர் தேங்கவில்லை. மோட்டார் பம்புகளை பொருத்தி துரிதமாக மழை நீரை வெளியேற்றி வருவதே இதற்கு காரணம். மழைநீர் வடிகால் நடைபெறும் இடங்களில் தவறுகள் நடந்தால் ஒப்பந்ததாரர்களுக்கு தற்போதைய சூழலில் அறிவுறுத்தல் தான் கொடுக்க முடியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பணி தாமதம் ஆகிவிடும்" இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT