Published : 11 Nov 2022 04:26 AM
Last Updated : 11 Nov 2022 04:26 AM

3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’: பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் நிலையில், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (நவ.10) தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி 11, 12-ம் தேதிகளில் நகரக் கூடும்.

இதன் காரணமாக, 11 முதல் 14-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

11-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிகக் கனமழை பெய்யும்.

தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

12-ம் தேதி நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக் கூடும்.

ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

13-ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

14-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, டெல்டாமாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கன முதல் மிகக் கனமழை பெய்யும்.

11, 12-ம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை: கனமழை எச்சரிக்கையை ஒட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதை காட்டும் வரைபடம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x