Last Updated : 10 Nov, 2022 03:33 PM

1  

Published : 10 Nov 2022 03:33 PM
Last Updated : 10 Nov 2022 03:33 PM

புதுச்சேரியை சோதனை எலியாகவே பாவிக்கிறது மோடி அரசு: மார்க்சிஸ்ட் விமர்சனம்

புதுச்சேரி சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம் | கோப்புப் படம்

புதுச்சேரி: “சுய விளம்பரத்துக்காக துணைநிலை ஆளுநர் தமிழிசை புதுச்சேரி மக்களை ஏமாற்றி வருகிறார்; புதுச்சேரியை சோதனை எலியாகவே பாவிக்கிறது மோடி அரசு” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலர் ராஜாங்கம் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "புதுச்சேரியில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில்போது, இரட்டை எஞ்சின் ஆட்சி வந்தால் புதுச்சேரி மாநிலம் வளம் பெறும், மக்கள் பிரச்சினை தீரும் என கூறி என்ஆர் காங். - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இதுவரை சந்திக்காத துன்பங்களை இன்று மக்கள் சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.

மின்துறை மிகப்பெரிய அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து 18 மாதங்களாகியும் ரேஷன் கடைகளை திறக்கவில்லை. 10 ஆயிரம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் 1060 பணியிடங்களை மட்டுமே நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அனைத்து காலி பணியிடங்களையும் அரசு நிரப்ப வேண்டும்.

மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வு நடத்தவில்லை. இந்த அரசு மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. மாணவர்களுக்கு சிறப்பு பேருந்தை இயக்கப்படவில்லை. தரமற்ற மதிய உணவு வழங்கப்படுகிறது.

துணைநிலை ஆளுநர் தமிழிசை பல இடங்களுக்கு செல்கிறார். மக்களுடைய எந்த பிரச்சினையை ஆளுநர் தீர்த்துள்ளார். சுய விளம்பரத்துக்காக புதுச்சேரி மக்களை ஆளுநர் தமிழிசை ஏமாற்றி வருகிறார். என்ஆர் காங். - பாஜக அரசு செயல்படாத, ஊழல் மலிந்த அரசாக இருக்கிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, இந்த இரட்டை எஞ்சின் ஆட்சி வந்து பிறகு புதுவையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மத்திய மோடி அரசு புதுச்சேரியை ஒரு சோதனை எலியாகவே பாவித்து வருகிறது. மின்துறை தனியார்மய விவகாரத்தில் முதல்வரின் நிலைபாடு என்ன என்பதை வெளியே கூறவில்லை. எனவே, மாநில உரிமையை மீட்டெடுக்கவும், பறிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை மீண்டும் பெறவும் ஒரு வலுவான மக்கள் போராட்டத்தை இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக கட்சிகளுடன் இணைந்து முன்னெடுப்பதற்காக வரும் 13-ல் மாநில உரிமைகள் தொடர்பான சிறப்பு மாநாட்டில் பங்கேற்க சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சுசூரி புதுவை வரவுள்ளார்" என்று ராஜாங்கம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x