Published : 10 Nov 2022 03:58 AM
Last Updated : 10 Nov 2022 03:58 AM
சென்னை: தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க வலியுறுத்தி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழக ஆளுநரின் பேச்சுகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரை திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனு, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நேற்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கொள்கை அளவிலும், செயல்பாட்டு அளவிலும் எதிர்ப்பது அரசமைப்புச் சட்டத்தை மீறியதாகும்.
2021 தேர்தலில் தமிழகத்தின் ஆட்சி உரிமையை மக்கள் திமுகவுக்கு வழங்கினர். எனினும், தமிழக அரசும், சட்டப்பேரவையும் மேற்கொண்டு வரும் பணிகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையிலும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் ஆளுநர் பேசுவது தொடர்கிறது.
குறிப்பாக, மாநில சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் பல்வேறு சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் தேவையின்றிக் காலம் தாழ்த்துகிறார். இது மாநில நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை அலுவல்களில் தலையிடுவதாகும்.
தமிழக ஆளுநர் தமது முதன்மையான பணியைச் செய்வதில்லை. கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான திருத்தச் சட்டம், ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு 10 மாதங்களாக, பரிசீலிக்கப்படாமல் உள்ளது. நீட் விலக்கு சட்ட மசோதா கடந்த ஆண்டு செப்.13-ல் அவருக்கு அனுப்பப்பட்டது. அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் பல மாதங்கள் காலம் தாழ்த்தினார். இது குறித்து அப்போதைய குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னரும் ஆளுநர், அந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார். இது ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறிய செயலாகும். இதனால் சிறப்புக் கூட்டத்தை கூட்டும் சூழல் உருவாகி, மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப் பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட் டது. இதுபோன்ற செயல்பாடுகள் ஆளுநருக்கு அழகல்ல.
பல்வேறு மதங்கள், மொழிகள், சாதிகளைச் சார்ந்த மக்கள் அமைதியாக வாழும் தமிழகத்தில், ஆளுநர் அடிக்கடி சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். மதச் சார்பின்மையில் பற்று கொண்ட அரசுக்கு இது சங்கடமாக உள்ளது.
சனாதன தர்மத்தைப் போற்றுவது, திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது, திராவிட மரபையும், தமிழ்ப் பெருமையையும் விமர்சிப்பது என சர்ச்சைக்குரிய பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழர்களின் உணர்வுகளையும், பெருமையையும் ஆளுநரின் இத்தகைய பேச்சுகள் புண்படுத்தி உள்ளன.
ஆளுநரின் சிந்தனை, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மற்றும் அமைச்சர்களின் முடிவுகளுக்கு அவர் இணங்கிச் செல்ல வேண்டும். தான் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்தை ஆளுநர் மீறிவிட்டார். மதவெறுப்பைத் தூண்டி, மாநிலத்தின் அமைதிக்கு அவர் அச்சுறுத்தலாக இருக்கிறார். தனது நடத்தை, செயல்களால் ஆளுநர் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை அவர் நிரூபித்துவிட்டார்.
எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்க, அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT