Published : 10 Nov 2022 04:04 AM
Last Updated : 10 Nov 2022 04:04 AM
சென்னை: குறைந்த அழுத்த மின் இணைப்பு கொண்ட, குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக துறைச் செயலர் வி.அருண்ராய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2022-23-ம் நிதியாண்டுக்கான, திருத்தி அமைக்கப்பட்ட மின்சாரக் கட்டணம், கடந்த செப்.10-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணப்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. எனவே, ஒரு நாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் (பீக் ஹவர்) விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்குமாறு பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கியப் பங்காற்றுவதைக் கருத்தில்கொண்டும், அவர்களின் கோரிக்கையை ஏற்றும், குறைந்த அழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்க முடிவுசெய்து, உரிய கொள்கை வழிகாட்டுதல்கள் வழங்குமாறு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இவ்வாறு மின் கட்டணத்தைக் குறைப்பதால், தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரிதும் பயனடையும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT