Published : 10 Nov 2022 04:10 AM
Last Updated : 10 Nov 2022 04:10 AM
ஓசூர்: பசுமைக்குடில் ரோஜா செடிகளில், ‘டவுனியா’ நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால், உற்பத்தி 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது என ஓசூர் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில், 1,500 ஏக்கருக்கு மேல், பசுமைக்குடில் மூலம் ரோஜா மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாடு செல்லும் ரோஜா: இங்கு அறுவடை செய்யப்படும் ரோஜா மலர்கள் உள்ளூர் சந்தைகளுக்கு மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருமணம் உள்ளிட்ட முகூர்த்த நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினத்தை மையமாக கொண்டு விவசாயிகள் ரோஜா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரோஜா செடிகளில், ‘டவுனியா’ நோய் தாக்குதல் தென்படும். நிகழாண்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மழை மற்றும் வெயிலின் தாக்கம் குறைந்து செடிகளில், ‘டவுனியா’ நோய் தாக்கம் தொடங்கியது. இதனால், செடிகளில் ரோஜாக்கள் கருகி 60 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பு: இது தொடர்பாக ஓசூர் தேசிய தோட்டக்கலைத்துறை வாரிய இயக்குநர் பாலசிவப்பிரசாத் கூறியதாவது: நிகழாண்டில் பரவலாக பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து, பசுமைக் குடிலில் வெப்பநிலை குறைந்தது. பசுமைக்குடிலில் 22 முதல் 28 டிகிரி வெப்பநிலை நீடிக்க வேண்டும். காற்றில் ஈரப்பதம் 70 முதல் 80 சதவீதம் வரை இருக்க வேண்டும்.
ஆனால், காற்றில் ஈரப்பதம் 90 சதவீதத்துக்கு மேல் உள்ளது. மேலும், வெப்பநிலை இரவில் 18 டிகிரியாக குறைந்து வருகிறது. சூரிய வெளிச்சமும் குறைவாக உள்ளது. மேலும், பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலை 10 மணி வரை பனி மூட்டமாக உள்ளது. இதனால், ரோஜா செடிகளில், ‘டவுனியா’ தாக்கம் அதிகரித்து 60 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி பாதிக்கும்: இதேநிலை தொடர்ந்தால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஏற்றுமதி பாதிக்கப்படும். நோய் தாக்குதலுக்கு உள்ளான செடிகள் சீரடைய 3 மாதங்களாகும். ‘டவுனியா’ நோயை தடுக்க முன்னெச்சரிக்கையாக சிஓசி மற்றும் ரெட்டோமல், அக்ரோபேட் முதலிய பூஞ்சான் தடுப்பு மருந்துகளை தெளிக்க விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT