Published : 10 Nov 2022 06:49 AM
Last Updated : 10 Nov 2022 06:49 AM
செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: தமிழகம் முழுவதும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில்வரைவு வாக்காளர் பட்டியலைஅந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். 3 மாவட்டங்களில் உள்ள 21 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 73 லட்சத்து 95,828 வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர்ஆ.ர.ராகுல்நாத் நேற்று வெளியிட்டார். ஆண்கள் 13 லட்சத்து 18,882 பேரும், பெண்கள் 13 லட்சத்து 42,926 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 434 பேரும் என 26 லட்சத்து 61,808 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 10 லட்சத்து 89,033 பேர் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.
அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6 லட்சத்து 66,464 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக செய்யூரில் 2 லட்சத்து 27,990 வாக்காளர்களும் உள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் 1 லட்சத்து 56,266 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடந்த சைக்கிள் பேரணியை சார்ஆட்சியர் ஷாஜீவனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 பேரவை தொகுதிகளின் வரைவுவாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார். மாவட்டத்தில் 16 லட்சத்து 86,605 ஆண்கள், 17 லட்சத்து 24,056 பெண்கள், 773 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என 34 லட்சத்து 11,434 வாக்காளர்கள்உள்ளனர். இதில், அதிகப்பட்சமாக ஆவடி தொகுதியில் 4 லட்சத்து 39,342வாக்காளர்களும், குறைந்தபட்சமாக பொன்னேரி (தனி) தொகுதியில் 2 லட்சத்து 63,961 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 3,657 வாக்குச்சாவடிகளில் பொது மக்களின் பார்வைக்கு வரைவுப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்வையிட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் போன்ற விவரங்களை அறியலாம். பிறகு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில், நடைபேரணியை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில், திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி, நேர்முக உதவியாளர் பரமேஸ்வரி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா பெற்றுக்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 22,152 ஆகும். இதில் ஆண்கள் 6 லட்சத்து 43,747, பெண்கள் 6 லட்சத்து 78,224, மூன்றாம் பாலினத்தவர் 181 ஆகும். ஆலந்தூர் தொகுதியில் அதிகபட்சமாக 3 லட்சத்து 81,834 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக உத்திரமேரூரில் 2 லட்சத்து66,028 வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்புதூர் பேரவைத் தொகுதியில் புதிதாக 1 வாக்குச் சாவடி மையம் ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் மொத்தம் 1,394 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.
சிறப்பு முகாம்: இந்நிலையில் வாக்காளர்அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம் வரும் 12,13, 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை5 மணி வரையிலும் நடைபெற உள்ளது. மற்ற நாட்களில் வாட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். ஜன.5-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.http://www.nvsp.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT