Published : 09 Nov 2022 11:15 PM
Last Updated : 09 Nov 2022 11:15 PM

மதுரை | மீனாட்சியம்மன் கோயில் அருகே மாநகராட்சி பல்லடுக்கு வாகன காப்பகம் செயல்பட தொடங்கியது

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் வடக்காமணி மூல வீதியில் உள்ள மாநகராட்சியின் பல்லடக்கு வாகன காப்பகம் நேற்றுமுதல் செயல்பட தொடங்கியது. பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்கள் வாகனங்களை இந்த பல்லடுக்கு வாகன காப்பகத்தில் நிறுத்தி செல்கிறார்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்கள் கார்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். அவர்கள் சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்தி செல்வதால் கோயிலை சுற்றிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதனால், மாநகராட்சியின் பழைய சென்டர் மார்க்கெட்டில் தற்போது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்லடுக்கு வாகன காப்பகம் கட்டப்பட்டுள்ளது.

6394 ச.மீ பரப்பளவில் கட்டப்பட்டு கீழ்தள-2ல் உள்ள வாகன காப்பகத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும், 6394 ச.மீ., கீழ்தளம்-1ல் உள்ள வாகன காப்பகத்தில் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வசதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகன காப்பகத்தில் கார் 3 மணிநேரம் வரை நிறுத்துவதற்கு ரூ.40-ம், 3 மணி நேரத்திற்கு மேலாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.20-ம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

அதுபோல், இரு சக்கர வாகனங்களுக்கு முதல் 3 மணி நேரம் வரை ரூ.15, அதன்பிறகு ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ரூ.10 கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஒரு மாதம் முழுவதும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கட்டணம் 6 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று முதல் இந்த வாகன காப்பகம் செயல்பட தொடங்கியது. பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்லத் தொடங்கினர். ஆனால், வாகன காப்பகத்திற்கு வரும் சாலை மிக குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை ஆறு மணி முதல் இரவு 10 மணி வரை இந்த வாகன காப்பகம் செயல்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x