Published : 09 Nov 2022 05:18 PM
Last Updated : 09 Nov 2022 05:18 PM
சென்னை: மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு, வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை, ராட்சத குழாய்கள் மூலம், சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களுக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலம் மாவட்டம், புலியங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் என்.பெருமாள் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "ஆண்டுதோறும் பருவ மழை காலத்தில், மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு, வீணாக கடலில் கலக்கிறது.
இந்த உபரி நீரை சேலம் மாவட்டம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், பெத்தநாயகன்பாளையம், கெங்கவல்லி பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் ராட்சத குழாய்கள் மூலம் வசிஷ்ட நதி, சுவேத நதி மற்றும் ஏரி, குளங்களுக்கு திருப்பிவிட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் பாசன வசதிக்காக தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் மேட்டூர் அணை அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் 5 கிராமங்களில் விவசாயம் மழையை நம்பியே உள்ளது. எனவே, உபரி நீரை பயன்படுத்தும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT