Published : 09 Nov 2022 01:51 PM
Last Updated : 09 Nov 2022 01:51 PM
சென்னை: புதுச்சேரியில் எத்தனை பேருக்கு சட்டவிரோதமாக பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களுடன் நாளை நேரில் ஆஜராக அம்மாநில பொதுப் பணித்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. தற்காலிகமாக பணியாளர்களாக நியமித்து பின் அவர்களே பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். இந்த சட்டவிரோதமான நியமனங்களால் படித்து விட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிச்சந்திரன், "புதுவை பொதுப் பணித்துறையில் 10 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, அரசு உத்தரவை பின்பற்றியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி, "விருப்பம் போல், வேண்டியவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்குவது என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு உரிமையை மறுக்கும் செயல். புதுவை பொதுப் பணி துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணி நியமங்களின் நிலை, எத்தனை பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களுடன் புதுச்சேரி மாநில பொதுப் பணித்துறை செயலாளர் நாளை (நவ.10) நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT