Published : 24 Nov 2016 12:41 PM
Last Updated : 24 Nov 2016 12:41 PM
உலக மரபுச் செல்வங்கள் வாரம் கடைப் பிடிக்கப்பட்டு வரும் நேரத்தில், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் போரில் மரணம் அடைந்த வீரனின் நடுகல்லை பாதுகாத்து வழிபட்டு வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.
திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் மேற்புறச் சாலையோரத்தில் ஆள் உயர நடுகல்லை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வழிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அந்த நடுகல்லை ஆய்வு செய்த ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் போ.கந்தசாமி கூறியதாவது:
இந்த நடுகல் 5 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் உள்ள புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வலது கையில் வாளுடனும், இடது கையில் கேடயத்துடனும் வீரன் நிற்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் தலைக்குமேல் தோரணவாயில் போன்று அலங்கரிக்கப்பட்டு தூண் பொதிகையில் அல்லி மலர் மொட்டு தொங்குவதுபோன்று இருபுறமும் வடிக்கப்பட்டுள்ளது.
இந்நடுகல் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த வீரன், போரில் வீர மரணம் அடைந்ததால் அவனை போற்றும் வகையில் ஊர் மக்கள் இச்சிற்பத்தை உருவாக்கியிருக்க வேண்டும். சில ஆண்டுகளாக பள்ளத்தில் கிடந்த இச்சிற்பத்தை அண்மையில் இப்பகுதி மக்கள் மீட்டெடுத்து குடல் காத்தான் என்ற பெயரில் காவல் தெய்வமாக வழிபடத் தொடங்கியுள்ளனர்.
இந்நடுகல் தொடர்பாக மக்களிடையே வேறொரு செவிவழிச் செய்தியும் நிலவி வருகிறது. அதாவது, குதிரை வீரன் ஒருவன் இப்பகுதியில் உள்ள குளத்தை தாண்டும் போது குதிரையிலிருந்து விழுந்து குடல் சரிந்து இறந்துவிட, அதே இடத்தில் அவ்வீரன் அடங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். அதனாலேயே அவ்வீரனுக்கு குடல் காத்தான் என்ற பெயரிடப்பட்டு, பின்னர் அதுவும் மருவி கொடைகாத்தான் மற்றும் கொட காத்தான் என்று வழங்கப்பட்டு வருவதாகக் கூறப் படுகிறது.
அதிகாரப்பூர்வ மான வரலாறு தெரியாவிட்டாலும், இச்சிற்பத்தை மக்கள் பாதுகாத்து வருவது சிறப்புக்குரியது. இதுபோன்று, தங்கள் வாழ்விடங்களில் காணப்படும் இயற்கை வளங்களையும், முன்னோர்கள் உருவாக்கிய கலை மற்றும் கைவினைப் பொருள்களையும் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும்.
ஆண்டுதோறும் நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரையிலான வாரத்தை ‘உலக மரபுச் செல்வங்கள் வாரம்’ என யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மரபுச் செல்வங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பழங்காலப் பொருட்கள் குறித்து தெரிய வந்தால், அது குறித்து உடனடியாக மரபுச் செல்வங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT