Published : 09 Nov 2022 04:36 AM
Last Updated : 09 Nov 2022 04:36 AM
சென்னை: சென்னை சென்ட்ரல்–கூடூர் வழித்தடத்தில் ரயில்களின் வேகம் மணிக்கு 130 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை சென்ட்ரல்–ரேணிகுண்டா வழித்தடம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் வேகம் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அந்த வழித்தடங்களையொட்டி வசிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகள் ரயில்களில் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்க, தண்டவாளத்தின் இருபுறமும் தடுப்புவேலி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய ரயில்வேயில் 18 ரயில்வே மண்டலங்களில் முக்கியமான மற்றும் பெரிய மண்டலமாக தெற்கு ரயில்வே மண்டலம் உள்ளது. இந்த மண்டலத்தில் சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன.
இந்த கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தைக் குறைக்க தெற்கு ரயில்வே முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக, தண்டவாளம் மற்றும் சிக்னல் முறையை மேம்படுத்துதல், வேகக் கட்டுப்பாடுகளை அகற்றுதல், பாலங்களை சீரமைத்தல், ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்ககட்டுமானப் பணிகளைச் செய்தல்ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பணிகள் முடிக்கப்பட்ட வழித்தடங்களில் சோதனை ஓட்டம் நடத்தி, ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை கோட்டத்தில் சென்னைசென்ட்ரல்–கூடூர், சென்னை சென்ட்ரல்–அத்திப்பட்டு, சென்னை–அரக்கோணம்–ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த வழித்தடங்களில் மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
கடந்த அக்.6-ம் தேதி, சென்னை சென்ட்ரல்–கூடூர் வழித்தடத்தில் மணிக்கு 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவுக்கு இயக்கப்பட்ட ஜன் சதாப்தி விரைவு ரயிலை இந்த வழித்தடத்தில் 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் வழக்கமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தான் ரயில்கள் இயக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, சென்னை சென்ட்ரல்–ரேணிகுண்டா வழித்தடத்தில் ரயில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் நிலையில், இந்த வழித்தடங்களையொட்டி வசிக்கும் பொதுமக்கள், கால்நடைகள் தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில்களில் அடிபட்டு இறப்பதைத் தடுக்க, இருபுறமும் தடுப்புவேலி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி மனோகரன் கூறியதாவது:
கால்நடைகள் இறப்பு: நவீன காலத்தில் ரயில்களில் வேகத்தை அதிகரிப்பது அவசியமாகிறது. சென்னை–கூடூர் வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்குவது வரவேற்கக்கூடியது. அதேநேரம், பாதுகாப்பு விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்துவது அவசியம். இந்த வழித்தடத்தையொட்டி வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் தண்டவாளத்தைக் கடக்கும்போதோ, அதன் அருகே நடந்து செல்லும்போதோ அதிவேகத்தில் செல்லும் ரயிலில் அடிபட்டு இறக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அண்மையில், மும்பை சென்ட்ரல்–காந்தி நகருக்கு இயக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில், எருமை மாடுகள் மீது மோதியது. இதில், ரயிலின் முகப்பு பகுதியில் பாதி அளவு சேதமடைந்தது. 4 மாடுகள் உயிரிழந்தன. மறுநாள் குஜராத் அருகே இதே ரயில், பசு மாடு மீது மோதியதில், அந்த பசு உயிரிழந்தது. இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, தடுப்பு வேலி அமைப்பது அவசியமாகும். இதற்கு பழைய ரயில் தண்டவாளங்களைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் ரயில்வேக்கு செலவும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்களுக்கு விழிப்புணர்வு தேவை: சென்னை ரயில்வே கோட்ட பயணிகள் ஆலோசனைக் குழுமுன்னாள் உறுப்பினரும், திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்கச் செயலருமான பாஸ்கர் கூறியதாவது:
ரயில் வேகம் அதிகரிக்கப்படும் வழித்தடங்களில் மக்களின் பாதுகாப்புக்காக, தடுப்பு வேலியைக் கட்டாயம் அமைக்க வேண்டும். இதன்மூலம், தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு பொதுமக்களோ, கால்நடைகளோ இறப்பதைத் தடுக்கலாம்.
தடுப்புவேலி அமைப்பதற்கு முன்பாக, மக்கள் நடமாட்டம் உள்ளபகுதியில் சுரங்கப்பாதை, நடை மேம்பாலம் போன்ற வசதிகளை செய்ய வேண்டும். ரயில்வே தண்டவாளத்தைக் கடப்பதை தடுப்பது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களும் பாதுகாப்பற்ற இடங்களில் தண்டவாளத்தைக் கடப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தேவையான இடங்களில்...: இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘தெற்கு ரயில்வே முழுவதும் தடுப்பு வேலி அமைப்பது சாத்தியமில்லை. அதேநேரம், ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்ட வழித்தடங்களையொட்டி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் மக்கள் தண்டவாளத்தைக் கடக்கக் கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கெல்லாம் தடுப்புவேலி அமைக்கப்படும். இதற்கான திட்டம் உள்ளது” என்றனர்.
10 வழித்தடங்களில் வேகம் அதிகரிக்க திட்டம்:
சென்னை சென்ட்ரல்–கூடூர் வழித்தடத்தில் விரைவு, மெயில் ரயில்களை மணிக்கு 110 கி.மீ. இருந்து 130 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து கூடூர் வழியாக புதுடெல்லி, ஹவுரா, ஜெய்ப்பூர், லக்னோ, ஹைதராபாத், ஆமதாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் சென்று திரும்பும் 86 விரைவு, மெயில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2022-23-ம் நிதியாண்டுக்குள், சென்னை சென்ட்ரல் -ரேணிகுண்டா வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்க இலக்கு உள்ளது. இதுதவிர, தஞ்சாவூர்–பொன்மலை வழித்தடம் உட்பட 9 வழித்தடங்களில் மணிக்கு 110 கி.மீ. வரை வேகம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT