Published : 09 Nov 2022 03:58 AM
Last Updated : 09 Nov 2022 03:58 AM
சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரையும் நவ.22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை கோட்டைமேடு, சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த மாதம் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்கள் அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, இந்த வழக்கு மாநில போலீஸாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. சென்னையில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(26) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (‘உபா’) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும், அவர்களது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ், பிரச்சார வீடியோக்கள் உட்பட பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கார் வெடிப்பில் இறந்த முபின், தனது கூட்டாளிகளுடன் இணைந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.
கோவை கார் வெடிப்பு வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தாலும், அவர்களுக்கு பக்கபலமாக தமிழக போலீஸாரும் உதவி வருகின்றனர். கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரும் கோவை சிறையில் இருந்து ஏற்கெனவே சென்னை புழல் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் 6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சம்பந்தப்பட்ட 6 பேரையும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்பு என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை ஆஜர்படுத்தினர். 6 பேரையும் வரும் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை சிறையில் அடைப்பதற்காக அவர்களை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT