Last Updated : 23 Nov, 2016 09:50 AM

 

Published : 23 Nov 2016 09:50 AM
Last Updated : 23 Nov 2016 09:50 AM

சீனாவில் இருந்து இறக்குமதியான கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் சென்னை துறைமுகத்தில் தேக்கம்: பணத் தட்டுப்பாடு காரணமாக வியாபாரிகள் அவதி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் சென்னைத் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.

500, 1,000 ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றுவதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக மொத்த வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகையான கிறிஸ்துமஸுக்கு இன்னும் 36 நாட்களே உள்ளன. வழக்கமாக ஆண்டுதோறும் கிறிஸ்துமஸுக்கு 50 நாட்களுக்கு முன்னதாகவே கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு வந்துவிடும். ஆனால் இந்தாண்டு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தாமதமாகிறது.

சென்னை பாரிமுனையில் உள்ள பந்தர் தெரு, மலையபெருமாள் தெரு, நாராயண முதலி தெரு மற்றும் நுங்கம்பாக்கத்தில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை கணிசமாக வாங்கி விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் இந்தியா மட்டுமல்லாமல் சீனாவில் இருந்தும் இப்பொருட்களை கொள்முதல் செய்து, தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களைவிட சீனாவில் தயாராகும் பொருட்கள் விலை குறைவாகவும், விதவிதமாகவும், அதிக பொலிவுடனும் இருப்பதால் அங்கிருந்து அதிகளவு பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளாக சீன பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து பாரிமுனையில் உள்ள மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், “கடந்தாண்டுகளைப் போல இந்தாண்டும் சீனாவில் இருந்து கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்கனவே ஆர்டர் கொடுத்து, அந்தப் பொருட்களும் சென்னை துறைமுகத்துக்கு சுமார் 15 கன்டெய்னர்களில் வந்து சேர்ந்துவிட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 கோடி. இப்போது 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் சுங்கவரி செலுத்தி கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுக்க முடியாமல் சிரமப்படுகிறோம்” என்றார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களின் ஒவ்வொரு வீட்டிலும் இப்பண்டிகையின் அடையாளமாக ஸ்டார் தொங்கவிடப்படும். கிறிஸ்துமஸ் மரம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் குடில் ஆகியன அமைக்கப்படும். இதற்கான பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கான உடை, இதர பொம்மைகள், பரிசுப் பொருட்கள் ஆகியன ஒரே செட்டாக விற்பனை செய்யப்படும்.

வீடுகள் மட்டுமல்லாமல் பல கார்ப்பரேட் நிறுவனங்களிலும் கிறிஸ்துமஸ் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இதற்கு தேவைப்படும் அலங்காரப் பொருட்களின் சில்லறை விற்பனை தொடங்க இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஆகும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர். பணத் தட்டுப்பாடு நீங்க தாமதமானால் இப்பொருட்கள் விற்பனை மேலும் தள்ளிப்போகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x