Published : 08 Nov 2022 08:13 PM
Last Updated : 08 Nov 2022 08:13 PM
சென்னை: “அவுட்சோர்சிங் முறையும், ஆட்குறைப்பு நடவடிக்கைளும், தனியார் மயத்தை நோக்கி பயணிக்கும் அரசாங்கத்தின் எண்ணங்களும் மீண்டும் பெயர் மாற்றப்பட்ட கிழக்கிந்திய கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் ஏற்பாடே என்பதை அரசு உணர்ந்து அரசாணை எண் 115-ஐ திரும்ப பெற வேண்டும்” என்று தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கடந்த அக்டோபர் 18-ம் தேதி தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டிருக்கும் அரசாணை நிலை எண்.115, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைய தலைமுறையினரின் மனதில் குழப்பத்தையும், கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசாணையை எதிர்ப்பதற்கான காரணம் என்ன? - அந்த அரசாணையில், காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ள அதேவேளையில், சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவினங்கள் மிகவும் அதிகமாக உள்ள ஓர் இக்கட்டான சூழலில் நாம் உள்ளோம். அதனால், நடைமுறையில் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான முறைகளை சீரமைப்பது மிகவும் அவசியமாகிறது. பணியமர்த்தல் மற்றும் பயிற்சிக்கான விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியினை இவ்வாண்டு தொடங்கியுள்ளோம். மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஆறுமாத கால அளவிற்குள் முன்மொழிவதற்கான மனிதவள சீர்த்திருத்தக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டி 5 பேர் அடங்கிய 'மனிதவள சீர்திருத்தக் குழு' அமைக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு அப்போதே அரசு ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகளை, கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ள நிலையில், நிதி அமைச்சரின் உரை குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை எனக்கூறப்பட்டது. ஆனால், இன்றோ மனிதவள சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பெயரிலேயே 'மேம்பாட்டுக்' குழு இல்லை, மனிதவள 'சீரமைப்புக்' குழு என்று உணர்த்தப்பட்டுள்ளது.
நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தனது சட்டப்பேரவை உரையில், 'நடைமுறையில் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான முறைகளை சீரமைப்பது மிகவும் அவசியமாகிறது' என தெரிவிப்பதற்கு முன்பாகவே, அதாவது இந்த குழு அமைக்கப்படுவதற்கு முன்பாகவே, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வெளிக்கொணர்வு முகமை மூலம் ஒப்பந்ததாரர்களை அமர்த்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரின் சுற்றறிக்கையில், (ந.க.எண்.21787/2021/EA2 நாள் 02.10.2021) மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள சம்பந்தப்பட்ட வகை வாரியான நிரந்தரப்
பணியாட்களின் இருப்பினைக் கருத்தில் கொண்டு அதற்கும் மேலும் பணியாட்கள் தேவைப்பட்டால் வெளிக்கொணர்வு முகமை மூலம் பணியாட்களை பணியமர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இனிமேல் நிரந்தரப்பணிமுறை கைவிடப்பட்டுவிட்டது என்பது தெரியவருகிறது. இதே நடைமுறைதான் இனி ஒவ்வொரு அரசுத்துறையிலும் நடைமுறைக்கு வரும் என்பதைத்தான் இந்த 'சீரமைப்புக்' குழு அமைக்கப்பட்டுள்ளதன் நோக்கம் அனைவருக்கும் சுட்டிக்காட்டுகிறது. இந்த குழவின் ஆய்வு வரம்புகள் அனைத்தும் ஊழியர் விரோத நடவடிக்கைகளாகவே உள்ளன.
பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமித்து அவர்களின் பணிச் செயல்பாடுகளை ஆராய்ந்து பின்னர் அவர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் போன்றவை முற்றிலும் அரசுத் துறைகளை வெளிமுகமை என்ற தனியார்மயத்திடம் கொண்டு சேர்க்கும் ஏற்பாடுகளே தவிர வேறு இல்லை.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
அவுட்சோர்சிங் முறையும், ஆட்குறைப்பு நடவடிக்கைளும், தனியார் மயத்தை நோக்கி பயணிக்கும் அரசாங்கத்தின் எண்ணங்களும் மீண்டும் பெயர்மாற்றப்பட்ட கிழக்கிந்திய கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் ஏற்பாடே என்பதை அரசு உணர வேண்டும். எனவே, இத்தகைய அபாயகரமான, தமிழக மக்களின் இளைஞர்களின், அரசுத் துறைகளின், எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் சார்பில் தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT