Published : 08 Nov 2022 04:33 PM
Last Updated : 08 Nov 2022 04:33 PM
சென்னை: "அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்படும் என்றும், இந்த நியமனங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்றும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அரசுக் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தோம். இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, டிஆர்பி மூலமாக அதற்கான உடனடியாக நடைபெறும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு இந்த நியமனங்களில் செல்லாது.
கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு தொடர்பான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. காலியிடங்கள் உள்ள அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் வாய்ப்புள்ளது.
அதேபோல், கல்லூரிப் பேராசிரியர்களுக்கான இடமாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரி பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில், இந்த இடமாற்றத்துக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த கலந்தாய்வில் 5408 பேர் கலந்துகொள்ள தகுதியானவர்கள். தற்போது 3,000 காலியிடங்கள் இருக்கின்றன. கலந்தாய்வில் கலந்துகொள்பவர்கள் கேட்கின்ற இடங்கள் ஆன்லைன் மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும். ஒரே இடத்திற்கு இரண்டு பேர் விண்ணப்பித்தால், பணிமூப்பின் அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.
இதனிடையே, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இம்மாதம் 12-ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் விவரம்: 10% இடஒதுக்கீடு தீர்ப்பு | நவ.12-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
முன்னதாக, பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் விவரம்: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்
ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். அதன் விவரம்: 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பில் கூறியது என்ன?
அதேவேளையில், பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார். அதன் விவரம்: 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் நீதிபதி ரவீந்திர பட்டின் மாறுபட்ட தீர்ப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT