

திருச்சி: "திமுகவும், அதிமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான் ஆனால் நாங்கள் மாறுபட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய பாதை எம்ஜிஆர் உருவாக்கிய பாதை. அந்த பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். திமுகவினர் அவர்களுடைய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கூட்டணி அமைத்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்று கூறப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "அதிமுகவைப் பொருத்தவரை, இது தொண்டர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் இதன் பரிணாம வளர்ச்சி 50 ஆண்டு காலமாக இருந்திருக்கிறது.
தொண்டர்களை எந்த நேரத்திலும் பிளவுப்படுத்தி பார்க்கமுடியாத இயக்கமாகத்தான் அதிமுக இன்று நிலைத்து நிற்கிறது. எங்களுக்கு எந்தவிதமான சிறுசேதமும் இல்லை. பொறுத்திருந்து பாருங்கள். சில சில பிரச்சினைகள் வரும், அவை சரியாகிவிடும். அதிமுகவில் அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நிற்கின்றனர். ஆனால், பிரச்சினை தலைமையில் இருப்பதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் உருவாகியிருக்கிறது. அதுபோகப்போக சரியாகிவிடும்" என்றார்.
அதிமுக கூட்டணிக்கு தயார் என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "அவருடைய கருத்து நல்ல கருத்துதான் அதனை வரவேற்கிறேன். வாய்ப்பு ஏற்பட்டால் அவரை சந்திப்பேன்" என்று கூறினார்.
மேலும், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "அதிமுகவை பாஜகவை பிரித்து வைப்பதற்கான நிலை இல்லை என்றும், தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்திப்பேன். திமுகவும், அதிமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான் ஆனால் நாங்கள் மாறுபட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய பாதை எம்ஜிஆர் உருவாக்கிய பாதை. அந்த பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். திமுக அவர்களுடைய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்" என்று அவர் கூறினார்.