Published : 08 Nov 2022 04:41 AM
Last Updated : 08 Nov 2022 04:41 AM
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு பலர் தேர்வாகியும், உயர் நீதிமன்றத்தில் கிடப்பில் உள்ள வழக்கால் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், அப்பணியிடங்களை பூர்த்தி செய்ய முடி யாத அளவுக்கு சிக்கல் நீடித்து வருகிறது.
தமிழகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் காலியாக உள்ள 113 மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை - 2 காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி 2018-ல் அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி, இந்தப் பணிக்கு விண்ணப்பித்த 2,176 பேரில், 1,328 பேர் மட்டும் எழுத் துத் தேர்வில் பங்கேற்றனர்.
உண்மைத் தன்மை ஆராய்வு
இதில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் பணிமனை அனுபவச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் அனுபவச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை ஆராயப்பட்டது.
கடந்த காலங்களில் விண்ணப்ப தாரர்களின் பணிமனை அனுபவ உண்மைத்தன்மை குறித்து அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் (ஆர்டிஓ) மட்டுமே களஆய்வு செய்து வந்த நிலையில், இம்முறை 2-ம் கட்டமாக போக்குவரத்து மண்டல இணை மற்றும் துணை ஆணையர்கள் மூலமாக பரிசோதிக்கப்பட்டது.
பின்னர், அப்போதைய போக்குவரத்து ஆணையர் அளித்த பரிந்துரையின்பேரில், இப்பணியிடங்களுக்கு 33 நபர்களுக்கு மட்டும் டிஎன்பிஎஸ்சி நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
2019-ல் தொடர்ந்த வழக்கு
ஆனால் 113 காலி பணியிடங்களுக்கு 1:2 என்ற விகிதத்தின் அடிப்படையில் 226 பேரை நேர்காணலுக்கு அழைக்கவில்லை என்று கூறி, தேர்வாகாத நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்றத்தில் 2019 ஜூலையில் வழக்குகளைத் தொடர்ந்தனர். அப்போது ஆரம்பித்த சிக்கல் இதுவரை தீரவில்லை.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நேர்முகத் தேர்வை நடத்தலாம், ஆனால் முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிடவே, அதன்படி 33 பேருக்கு மட்டும் டிஎன்பிஎஸ்சி நேர்காணல் நடத்தியுள்ளது.
33 பேர் மேல்முறையீடு
இந்நிலையில் மீண்டும் தனி நீதிபதி, 2019 ஆக.26-ம் தேதி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் மதிப்பெண் குறிப்பிடாமல் பட்டியலை வெளியிட வேண்டும் என உத்தரவிடவே, அதை எதிர்த்து 33 பேரும் மேல் முறையீடு செய்தனர்.
அந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு. கடந்த 2019 செப்.24-ல் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தேர்ச்சி பெறாதவர்கள் வழக்குத் தொடர, அதை ஏற்க மறுத்த மற்ற இருநீதிபதிகள் அமர்வு, 33 பேருக்கு பணி நியமனம் வழங்க உத்தர விட்டுள்ளது.
அதன்படி, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கடந்த 2019 நவ.4-ல் இறுதியாக நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களில் ஒருவரை நிராகரித்துவிட்டு, 32 பேருக்கு மட்டும் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2 பதவிகளுக்கு நியமன ஆணை வழங்கியுள்ளது.
3-வது முறை சான்றிதழ் சரிபார்ப்பு
இந்நிலையில், நிலுவையில் இருந்த இந்த வழக்கை 2019 டிச.9-ல் விசாரித்த மற்றொரு தனி நீதிபதி, 32 பேரது அனுபவ சான்றிதழ்களை மூன்றாவது முறையாக சரிபார்க்க உத்தரவிடவே, அதன்படி மீண்டும் சரிபார்ப்பு படலம் நடந்துள்ளது. அப்போது, மற்றவர்கள் என்னகாரணத்துக்காக நிராகரிக்கப்பட்டனர் என்பதற்கான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவை வழக்குத் தொடர்ந்த, தேர்வாகாத நபர்களுக்கும் சார்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பதவிக்கு 1:2 என்ற அடிப்படையில் புதிய பட்டியலை தேர்வு செய்து, அனுபவச் சான்றிதழ்களிலும் சில நிபந்தனைகளை தளர்த்தி உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த 2020 ஜன.24-ல் உத்தரவிட்டதால், சிக்கல் எழுந்தது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை தலைமை நீதிபதி அமர்வு 2020 ஆக.18-ல் ரத்து செய்தது.
அவசரமாக பட்டியல் வெளியீடு
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சில தினங்களுக்கு முன்பாக அதிமுக ஆட்சியில் அவசரம், அவசரமாக 226 பேர் அடங்கிய புதிய பட்டியல் கடந்த 2021, ஏப்.28-ம்தேதி வெளியிடப்பட்டுள்ளது. (இதில் பலர் ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சியால் போதிய முன் அனுபவம் பெறாதவர்கள் என நிராகரிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது).
இந்த உத்தரவை எதிர்த்து 32 பேரும் வழக்குத் தொடர்ந்து தடையாணை பெற்றனர். இப்படி மாறி, மாறி உயர் நீதிமன்றத்தில் சுமார் 20 நீதிபதிகள் இந்தவழக்கை விசாரித்தும், மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான சிக்கலுக்கு இன்னும் சுமுகத் தீர்வு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
113 காலி பணியிடங்களுக்கு 1:2 என்ற விகிதத்தின் அடிப்படையில் 226 பேரை நேர்காணலுக்கு அழைக்கவில்லை என்று கூறி, உயர் நீதிமன்றத்தில் 2019-ம் ஆண்டு வழக்குகளைத் தொடர்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT