Published : 08 Nov 2022 07:53 AM
Last Updated : 08 Nov 2022 07:53 AM
சென்னை: பொருளாதாரத்தில் நலித்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத்தின் 103-வது அரசியல் திருத்தச் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. உலகில் எந்த நாட்டிலும் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. பொருளாதாரம் என்பதுநிரந்தரமான ஒன்றல்ல. இடஒதுக்கீடு கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். சமூகநீதிக் கோட்பாட்டுக்கு எதிரான இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்துக்கு மிகக் கூடாது என்று 1962-ம் ஆண்டில் பாலாஜி வழக்கிலும், 1992-ம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், 10 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிப்பதற்காக, இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு வளைக்க முடியாதது அல்ல என்றுநீதிபதிகள் கூறியுள்ளனர். இது சமூக அநீதியானது.
விசிக தலைவர் திருமாவளவன்: இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து விசிக சார்பில் பேரமர்வு விசாரணைக்குச் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் இத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள் என நம்புகிறோம். இடஒதுக்கீட்டுப் பிரச்சினை அரசியல் களத்தில் தீர்க்கப்பட வேண்டியது. 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: பாஜக அரசு நிறைவேற்றிய 103-வது சட்டத் திருத்தம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை தகர்த்திருக்கிறது. இதனை உச்ச நீதிமன்றம் பெரும்பான்மை தீர்ப்பு அடிப்படையில் செல்லும் என்று கூறி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. சமூக நீதிக்காகப் போராடும் ஜனநாயக சக்திகள் ஒன்றுசேர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி: 103-வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என்றபெரும்பான்மைத் தீர்ப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான சமூகநீதி தத்துவத்துக்கு நேர் முரணானது. இதனை நியாயப்படுத்திட எந்த புள்ளி விவரமும், ஆதாரமும் கிடையாது. இதன் மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டியது அவசியம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புஅதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. எனவே, தமிழக அரசு இதில் உறுதியாக நின்று, 69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக இத்தகைய இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி, அதற்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் உண்மையான சமூக நீதியாகும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT