Last Updated : 29 Nov, 2016 03:29 PM

 

Published : 29 Nov 2016 03:29 PM
Last Updated : 29 Nov 2016 03:29 PM

தட்டு வெட்டும் இயந்திரத்தைப் பெற புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கையால் விவசாயிகள் தவிப்பு

திருப்பூர் மாவட்டம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்று வந்த பாசனப்பரப்பு பாதியாக சுருங்கி விட்டதாக க்கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரும்பாலான கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம் உணவாக அளிக்கப்படுகிறது. கால்நடைகள் அவற்றை விரயமாக்காமல் தடுக்க ஏதுவாக சிறு துண்டுகளாக நறுக்கி அளிக்கும் வழக்கம் உள்ளது. இவற்றை எளிதாக்கும் விதமாக வேளாண் பொறியியல் துறை சார்பாக தட்டு வெட்டும் இயந்திரம் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

மத்திய அரசு வழங்கும் மானியத் தொகையை பெற கொண்டு வரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இத்திட்டத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநிலத் தலைவர் வேலாயுதம் கூறும்போது, ‘விவசாயிகளுக்கு அரசு அளிக்கும் மானியத்தை கழித்து விட்டு, எஞ்சிய தொகையை செலுத்தி எளிதாக இந்த இயந்திரத்தை பெற்று பயனடைந்து வந்தனர். தற்போது முழுத்தொகையையும் செலுத்தினால்தான் இயந்திரம் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகள் இத்திட்டத்தின் பலனை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள விதிகள் படியே இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளர் ஒருவர் கூறும்போது, ‘மத்திய அரசின் வேளாண் வளர்ச்சித்திட்டம் மூலம் சிறு, குறு, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் இக்கருவி வழங்கப்படுகிறது. இக்கருவியின் விலை ரூ.19,000. இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும். கடந்த 2012-ல் இத்திட்டம் அறிமுகமானது.

இது குறித்து முழுமையான விழிப்புணர்வு இல்லாததால் பலருக்கும் அதன் பலன் சென்றடையவில்லை. இதுவரை ஒரு வட்டத்துக்கு 1,000 வீதம் சுமார் 5,000 விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் தேவை பல மடங்கு அதிகமாக உள்ளது. காஸ் மானியத்தைப் போலவே மத்திய அரசு இத்திட்டத்திலும், முழுத்தொகையையும் செலுத்தியபிறகே தட்டு வெட்டும் இயந்திரத்தை வழங்க வேண்டும் என புதிய நிபந்தனை விதித்துள்ளது.

உடுமலை வட்டாரத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்து காத்திருக்கும் 500 பேருக்கும் முழுத்தொகையை செலுத்த வலியுறுத்தி வருகிறோம். இதற்கு பெரும்பாலான விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளதோடு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்’ என்றார்.

தமிழ்நாடு கால்நடைத்துறை கணக்கெடுப்பு 2001-ன்படி உடுமலை வட்டாரத்தில் மட்டும் சுமார் 80,000 கால்நடைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. அவை தினமும் உணவாக உட்கொள்ளும் பல லட்சம் டன் உணவுப் பொருள் வீணாவதை தடுக்கும் இக்கருவியின் பயன்பாடு அனைத்து விவசாயிகளையும் சென்றடையும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x