Published : 30 Nov 2016 02:56 PM
Last Updated : 30 Nov 2016 02:56 PM
பண்டைய தமிழர் பாரம்பரியம் குறித்து அறிந்துகொள்வதில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்று திருச்சி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர், பழங்கால பொருள் சேகரிப்பாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
திருச்சி டவுன் ஹால் வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பண்டைய தமிழர் பாரம்பரிய பொருட்கள் குறித்த சிறப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சி நாளை (டிச.1) நிறைவடைகிறது. இதற்காக அருங்காட்சியகத்தில் உள்ள பாரம் பரிய பொருட்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பழங்கால பொருள் சேகரிப்பாளர்கள் சுமார் 20 பேரின் சேகரிப்புகளும் வரவழைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
திருச்சி மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) இளங் கோவன், அருங்காட்சியக காப்பாட் சியர் பெரியசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் தொடங்கிவைத்தனர்.
முன்னதாக, அருங்காட்சி யகத்துக்கு அருகிலுள்ள அரசுப் பள்ளியில் இருந்து மாணவிகள் வரவழைக்கப்பட்டனர். அந்த மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் பழங்காலப் பொருட்களைப் பார்த்து ரசித்தனர். காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த கை ராட்டையைச் சுற்றியும், பல்வேறு வகை மீன்கள், பறவைகள், பாம்புகள் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உயிரினங்களைப் பார்த்தும் அவர்கள் மிகுந்த பரவசமடைந்தனர்.
ஆனால், கண்காட்சியைப் பார்வையிட பிற்பகல் வரை பொதுமக்கள் யாரும் வராததால், பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர்கள், அருங்காட்சியக ஊழியர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். “பழங்கால பொருட்கள் குறித்து பொதுமக்களிடம் குறிப்பாக, பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே அருங்காட்சியகத்துக்கு மக்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர்கள் கூறியது: மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களும் நமது பாரம்பரியச் சின்னங்கள்தான். அங்கும் வழிபாடு நடத்த மட்டுமே பொதுமக்கள் சென்று வருகின்றனர். கோயில் வளாகத்தில் உள்ள சிற்பங்களையோ, பண்டைய கட்டிடக் கலையையோ, கலைநயத்தையோ கண்டு ரசிப்பதில்லை.
அதேபோல, பல்வேறு ஷாப்பிங் மால்கள், கடைவீதிகள், சினிமா தியேட்டர்கள், சுற்றுலா மையங் களுக்கு குடும்பத்துடன் செல்லும் பொதுமக்கள், பழங்கால பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அருங்காட் சியகத்துக்கு வருவதற்கு அரை மணி நேரம்கூட ஒதுக்குவதில்லை.
பாரம்பரிய கலாச்சாரம், பண்பாட்டை அறிந்துகொள்வதில் பொதுமக்களிடையே, குறிப்பாக பெற்றோர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம். இதனால்தான் முக்கிய கடை வீதிகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் அருங்காட்சியகம் இருந்தும் மக்கள் வருகை சொற்பமாக உள்ளது.
பாரம்பரிய பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால்தான், இனி எங்காவது அதுபோன்ற பொருட்கள் கிடைக்கும்போது உரிய இடத்துக்கு வரப்பெற்று பாதுகாத்து வைக்கப்பட்டு, வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்க பயன்படும்” என்றனர்.
இதுதொடர்பாக அருங்காட்சியக காப்பாட்சியர் பெரியசாமி கூறியது:
திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்ட உயிரினங்கள், 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள், கடலாக இருந்து மறைந்துபோன அரியலூரில் கிடைத்த புதை படிமங்கள், பல்லவர் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல்வேறு கற்சிலைகள், பல்வேறு நாணயங்கள், பூஜைப் பொருட்கள் என ஏராளமான பழங்கால பொருட்கள் உள்ளன. பெயவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.3 நுழைவுக் கட்டணம். பள்ளிச் சீருடையில் குழுவாக வரும் மாணவ, மாணவிகளிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. அப்படி இருந்தும் அருங்காட்சியகத்துக்கு அதன் வேலை நாட்களில் சுமார் 40 பேர் வரை மட்டுமே வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து வருவதில் கல்வித் துறையில் அனுமதி பெறுவது, போக்குவரத்து வசதி, குழந்தைகளின் பாதுகாப்பு என தலைமையாசிரிகளுக்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளதால், அவர் கள் வருவதில் சிக்கல் உள்ளது.
இருப்பினும், பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைச் சந்தித்து, அருங்காட்சியகத்தைப் பார்வையிட மாணவ, மாணவிகளை அனுப்ப பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு கடிதம் கொடுக்கவுள்ளேன்.
முன்னோர்களின் பாரம்பரியத்தை புத்தகங்களில் படித்து அறிந்துகொள்வதுடன், நேரில் பார்க்கும்போது மாணவ- மாணவிகளின் சிந்தனை தூண்டப்படும். எனவே, குழந்தைகளை அழைத்து வந்து பாரம்பரியத்தை எடுத்துரைப்பதில் பெற்றோர்களுக்கு கடமை உள்ளது என்றார்.
மிகச் சிறிய குரான், பைபிள்
இந்த சிறப்பு கண்காட்சியில் பல்வேறு வடிவ கத்திகள், வாள்கள், விளக்குகள், மரப்பாச்சி பொம்மைகள், கல்லாப் பெட்டிகள், இசைத்தட்டுகள், பூட்டு, குடுவைகள், சங்கு வகைகள், சிலம்பு, தேவியர் சிலைகள் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான சிலைகள் என பல்வேறு பழங்காலப் பொருட்கள் உள்ளன.
குறிப்பாக, 2.95 கிராம் எடையில் உலகின் மிகச் சிறிய வடிவிலான குரான் மற்றும் பைபிள் ஆகியனவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT