Published : 07 Nov 2022 11:55 PM
Last Updated : 07 Nov 2022 11:55 PM
கோவை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உள்ளது போல் சிலர் மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர் என தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட முதல்வர் முடிவெடுத்துள்ளார். அதை நிறைவேற்ற திறன் கொண்டவர்கள் அதிகம் தேவைப்படுவர். இன்றைக்கு வணிகவியல் பிரிவு மாணவர்கள் தொழில்துறையில் நிறைய பங்களிக்க வேண்டிய தேவை உள்ளது. வரும் காலங்களில் தொழில்துறையில், நிறைய சிஏ படித்தவர்கள் தேவை இருக்கிறது.
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நிலைநாட்டப்படுகிறது. தமிழகம் அமைதியாக செல்கிறது. சிலர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருப்பது போல் மாயத்தாற்றை உருவாக்குவதற்காக முயற்சிக்கின்றனர். அந்த முயற்சிகள் நிச்சயம் தோற்றுப்போகும். அவர்களுக்கு உண்மையிலேயே தமிழகத்தின் மீது அக்கறை இருந்தால், ஒற்றுமையை வளர்த்துவதற்கும், அதை சீர்குலைக்காமல் இருப்பதற்காகவும் அவர்கள் ஏதாவது நல்ல காரியம் செய்தால் நல்லது. கோவையில் மக்கள் சகோதரத்தன்மையோடு அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.
கோவையை பொறுத்தவரை கட்டமைப்பு வசதிகள், வாய்ப்புகள், கல்விக்கூடங்கள், திறன்கள் உள்ளன. கோவையின் வளர்ச்சி நிச்சயம் பெருகி வரும். முதல்வர் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை, முன்னெடுப்புகளை 2-ம் கட்ட, 3-ம் கட்ட நகரங்களை நோக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. அதை யாராலும் சீர்குலைக்க முடியாது. அந்த வளர்ச்சி நிலையாக வரும். தொழில்துறையினர் அரசை முழுமையாக நம்புகின்றனர். அரசு அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்றபடி இருக்கிறது. நான் முதல்வன் போன்ற திட்டங்களை அறிவித்து திறன் மேம்பாட்டுக்கு தமிழக முதல்வர் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழகத்தி்ல் மென்மேலும் அதிக திறன் உள்ளவர்கள் தேவை என்பதை இந்த அரசு நன்றாக உணர்ந்துள்ளது. பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு தேவையான திறன்பெற்ற பணியாளர்களை கொடுக்க வேண்டிய கடமை உள்ளது. அதற்கான வழிமுறைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் ஒரு நிலையான, தொலைநோக்கு பார்வை கொண்ட அரசு இருக்கிறது. சாலைகள், குடிநீர், ஐடி நிறுவனங்கள், மனிதவளக் கட்டமைப்புகள் தேவையான அளவில் உள்ளன. எனவே, நாம் மற்ற மாநிலங்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த ஓராண்டில் நமது சாதனை சொல்லும்படியாக வந்துள்ளது. வரும் நாட்களில் அது இன்னும் அதிகரிக்கும். பிற நாடுகள், பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, தமிழகத்தில் நியாயமான மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT