Published : 07 Nov 2022 06:22 PM
Last Updated : 07 Nov 2022 06:22 PM
சென்னை: "அதிமுக தலைமையில் கூட்டணி என்பதில் எந்தவொரு குழப்பமும் இல்லை, எப்போதும் குழப்பம் இருந்ததும் கிடையாது. அதனால், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதில் எந்தவொரு தவறும் இல்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த பிரதமர் மோடி குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று இபிஎஸ் பேசியிருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அதிமுகதான் பெரிய கட்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம், தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) அதிமுக தமிழகத்தின் மிகப் பெரிய ஒரு பலம் வாய்ந்த கட்சி. தொடர்ந்து ஆட்சியில் பல காலகட்டங்கள் இருந்த ஒரு கட்சி.
அதனால் இந்தக் கூட்டணியில் எந்தவொரு குழப்பமும் கிடையாது. கூட்டணி தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் கூறியதில் எந்த தவறும் இல்லை. 2021-ம் ஆண்டு தேர்தல் அதிமுக தலைமையில்தான் நடந்தது. இன்றைய தேதியில் நாங்கள் எல்லாம் ஒரே கூட்டணியில் இருக்கிறோம். அதிமுக தலைமையில் கூட்டணி என்பதில் எந்தவொரு குழப்பமும் இல்லை, எப்போதும் குழப்பம் இருந்ததும் கிடையாது. அதனால் அவர் கூறியதில் எந்தவொரு தவறும் இல்லை. அவர் சரியாகத்தான் கூறியிருக்கிறார்" என்றார்.
அப்போது அவரிடம் திமுகவை வீழ்த்த கூட்டணிக்கு செல்ல தயார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "புதிதாக வரக்கூடிய ஒரு கட்சி, அல்லது இணைப்பு அதன் செயல்பாடுகள் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்து எல்லாம் பேசுவதற்கு எனக்கும் அதிகாரம் இல்லை. தேசிய தலைமைதான் அதுதொடர்பான முடிவை எடுப்பார்கள். நேரம் காலம் வரும்போது நிச்சயம் அதுகுறித்து பேசுவோம்" என்றார் அவர்.
முன்னதாக, நாமக்கல்லில் நடந்த அதிமுக 51-வது ஆண்டு தொடக்க விழாவில் பேசிய இபிஎஸ், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று பேசியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT